ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சத்தீஸ்கர், மராட்டியம், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், கொண்டகவான் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் எல்லையில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை: ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.