ராய்ப்பூர் : சத்தீஸ்கர்-ஒடிசா மாநில எல்லையில் போலீசாருடன் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்றாகும். இங்கு மலைப்பகுதிகளை வசிப்பிடமாக கொண்டு சட்டவிரோத செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனா். கிராமப்புறங்களில் உள்ளவர்களை மிரட்டுவது, அரசுக்கு எதிராக செயல்பட வைப்பது மற்றும் ஆயுதங்கள் கையாள்வது போன்ற செயல்களில் மாவோயிஸ்ட்கள் ஈடுபடுகின்றனா்.அவர்கள் இருப்பிடம் குறித்து கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் உள்ளூர் போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் அதிரடி பிளான் போட்டு தாக்குதல் நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டம் மெயின்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், சிஆர்பிஎப் வீரர்கள் அந்த இடத்தில் நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள், வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். உஷாரடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் மாவோயிஸ்ட்கள் 14 பேர் உயிரிழந்தனர். தலைக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்திருந்த நக்சலைட்டும் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் இருந்து தானியங்கி துப்பாக்கிகள், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏராளமாக கைப்பற்றப்பட்டன. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக சிஆர்பிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் என்கவுண்டரில் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
The post சத்தீஸ்கர்-ஒடிசா மாநில எல்லையில் 14 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை : பாதுகாப்புப் படை அதிரடி!! appeared first on Dinakaran.