லக்னோ: சமீபத்தில் சந்நியாசியான நடிகை மம்தா குல்கர்னி, உலக வாழ்க்கையில் மூழ்கியிருந்ததால் அவருக்கு வழங்கப்பட்ட சந்நியாசி பதவி பறிக்கப்பட்டது. மேலும் அந்த அமைப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். மகா கும்பமேளாவில் சந்நியாசம் பெற்ற நடிகை மம்தா குல்கர்னி, திடீரென மகாமண்டலேஷ்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை சேர்த்துக் கொண்ட சந்நியாசியும் நீக்கப்பட்டார். பாலிவுட் மற்றும் பிற மொழிகளில் நடித்த முன்னாள் நடிகை மம்தா குல்கர்னி போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, வெளிநாட்டில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியா திரும்பினார். அவர் உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொண்டார்.
திடீரென கும்பமேளாவில் தன்னை சந்நியாசியாக மாற்றிக்கொண்ட மம்தா குல்கர்னி, தனது பெயரை யாமை மம்தா நந்தகிரி என்று மாற்றிக்கொண்டார். சந்நியாசிகளை உருவாக்கும் கின்னர் அகாரா ஆன்மீக மடத்தில் சேர்ந்த அவர், அந்த மடத்தில் மகாமண்டலேஷ்வராக மாற்றப்பட்டார். அவருக்கு மகாமண்டலேஷ்வர் பதவியை லட்சுமி நாராயண் திரிபாதி வழங்கினார். இதுவரை உலக வாழ்க்கையில் மூழ்கியிருந்த மம்தா குல்கர்னி திடீரென மகாமண்டலேஷ்வராக ஆக்கப்பட்டதற்கு, கின்னர் அகாரா மடத்தில் இருக்கும் மற்ற சந்நியாசிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அந்த மடத்தின் தலைவர் ரிஷி அஜய் தாஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மம்தா குல்கர்னி கின்னர் அகாரா மடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதோடு அவரை எனக்கு தெரியாமல் கின்னர் அகாராவில் சேர்த்துக்கொண்டதற்காக மகாமண்டலேஷ்வர் லட்சுமி நாராயண் திரிபாதியும் கின்னர் அகாராவில் இருந்து நீக்கப்படுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post சந்நியாசியான நடிகை விரட்டியடிப்பு: சேர்த்துக் கொண்டு பதவி வழங்கியவரும் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.