திருவனந்தபுரம்: சபரிமலையில் ஜனவரி 17ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் முடிந்துவிட்டது. மகரவிளக்கு பூஜை முடிந்து நடை சாத்துவதற்கு முன் 2 நாட்கள் மட்டுமே தரிசனத்திற்கான இடம் காலியாக உள்ளது. இதனால் முன்பதிவு கிடைக்காத பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். சபரிமலையில் கடந்த நவம்பர் 15ம் தேதி நடை திறந்த அன்று முதல் கடந்த வருடத்தை விட அதிகமாக பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
தினமும் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் என மொத்தம் 80 ஆயிரம் பேருக்கு தரிசனத்திற்கு அனுமதி அளிக்க தீர்மானிக்கப்பட்டது. நேற்று வரை கடந்த 22 நாளில் வந்த பக்தர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்கி விட்டது. இது கடந்த வருட எண்ணிக்கையை விட 4 லட்சத்திற்கும் அதிகமாகும். உடனடி முன்பதிவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் ஆன்லைனில் முன்பதிவு கிடைக்காதவர்களும் இதில் முன்பதிவு செய்கின்றனர்.
இதனால் சில நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரை உடனடி முன்பதிவு மூலம் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் முடிவடைந்து விட்டது. மகரவிளக்கு பூஜை முடிந்து ஜனவரி 20ம் தேதி காலை நடை சாத்தப்படும். ஆனால் அன்று பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.
ஜனவரி 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மட்டுமே தற்போதைக்கு ஆன்லைன் முன்பதிவு காலியாக உள்ளது. மண்டல காலம் தொடங்கி பாதி நாட்கள் மட்டுமே ஆன நிலையில் 2 நாட்கள் தவிர ஏனைய நாட்களில் ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துள்ளது முன்பதிவு கிடைக்காத பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சபரிமலையில் ஜனவரி 17ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிந்தது: இன்னும் 2 நாள் மட்டுமே காலியாக உள்ளது appeared first on Dinakaran.