திருவனந்தபுரம்: சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைவதை தொடர்ந்து நாளை காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலையில் மண்டல பூஜை கடந்த டிசம்பர் 26ம் தேதியும், மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் கடந்த 14ம் தேதியும் நடைபெற்றது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் 6 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை வந்தனர். மண்டல காலத்தில் மட்டும் 32.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மண்டல காலத்தில் மொத்தம் ரூ.297 கோடிக்கும் மேல் மொத்த வருமானம் கிடைத்தது. சபரிமலையில் தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் நேற்று வரை தினமும் 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சபரிமலை வந்தனர்.
இந்நிலையில் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இதனால் பம்பையில் இருந்து இன்று மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நாளை அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்திற்குப் பின்னர் திருவாபரணப் பெட்டி பந்தளத்திற்கு கொண்டு செல்லப்படும். தொடர்ந்து காலை 6.30 மணியளவில் சபரிமலை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஐயப்ப விக்கிரகத்தில் திருநீறு பூசி ஐயப்பனை தவக்கோலத்தில் அமர்த்தி கோயில் நடையை சாத்துவார். நாளை பந்தளம் மன்னர் பிரதிநிதிக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்படும்.
The post சபரிமலையில் நாளை நடை அடைப்பு: இன்று இரவு வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.