திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நாளை (14ம் தேதி) நடைபெறுகிறது. திருவாபரண ஊர்வலம் பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் நேற்று பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நாளை மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக இன்றும், நாளையும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி இரவு 10 மணி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்று வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 20ம் தேதி காலை 7 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும்.
The post சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை: திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது appeared first on Dinakaran.