திருவனந்தபுரம்: பங்குனி ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆறாட்டு திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். இவ்வருட திருவிழா நாளை மறுநாள்(ஏப். 2ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை மறுநாள்(ஏப்.2ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கொடியேற்றத்திற்கான சிறப்பு பூஜைகள் தொடங்கும். காலை 9.30 மணிக்கு மேல் தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் திருவிழா கொடி ஏற்றப்படும். ஏப்ரல் 10ம் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள்(11ம் தேதி) பம்பையில் ஐயப்பனுக்கு ஆறாட்டும் நடைபெறும். அன்றுடன் 10 நாள் திருவிழா நிறைவடையும். வழக்கமாக திருவிழா முடிந்த அன்று சபரிமலை கோயில் நடை சாத்தப்படும் . ஆனால் இவ்வருடம் திருவிழாவை ஒட்டி சித்திரை விஷு பண்டிகையும் வருவதால் கோயில் நடை தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும்.
ஏப்ரல் 14ம் தேதி சித்திரை விஷுவை முன்னிட்டு கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள். சித்திரை விஷு பூஜைகள் முடிந்த பின்னர் ஏப்ரல் 19ம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் செயல்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
The post சபரிமலையில் பங்குனி ஆறாட்டு திருவிழா: நாளை நடை திறப்பு appeared first on Dinakaran.