திருவனந்தபுரம்: மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (16ம் தேதி) தொடங்கிய மண்டல கால பூஜைகள் டிசம்பர் 26ம் தேதி நடந்த பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. 3 நாட்களுக்குப் பிறகு மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (31ம் தேதி) முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. கடந்த 14ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசித்தனர். நேற்று முன்தினத்துடன் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடைந்தது.
நேற்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கப்படவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணியளவில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஐயப்ப விக்கிரகத்தில் திருநீறு பூசி ஐயப்பனை தவக்கோலத்தில் இருத்தி கோயில் நடையை சாத்தினார். அப்போது பந்தளம் மன்னர் பிரதிநிதிக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. நடை சாத்திய பின்னர் கோயில் சாவியை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்திற்கு சபரிமலையில் பூஜைகளை நடத்த வேண்டும் என்று கூறி அந்த சாவியை மேல்சாந்தியிடம் மன்னர் பிரதிநிதி திரும்ப ஒப்படைத்தார்.
முன்னதாக கணபதி ஹோமம் முடிந்தவுடன் திருவாபரணப் பெட்டிகள் பந்தளத்திற்கு திரும்ப கொண்டு செல்லப்பட்டன. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்படும். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் சபரிமலையில் நிருபர்களிடம் கூறியது: சபரிமலையில் எதிர்பார்த்ததை விட அதிகமாக பக்தர்கள் வந்தபோதிலும் போலீசாரின் சிறப்பான நடவடிக்கைகளால் நெரிசல் ஏற்படாமலும், நீண்ட நேரம் காத்திருக்காமலும் பக்தர்கள் மிக எளிதில் தரிசனம் செய்து திரும்பினர். 18ம் தேதி வரை 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த வருடத்தை விட இம்முறை 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை வந்துள்ளனர். சபரிமலை கோயில் வருமானமும் இந்த வருடம் அதிகரித்துள்ளது என்றார்.
The post சபரிமலை கோயில் நடை அடைப்பு: 52 லட்சம் பேர் தரிசனம் appeared first on Dinakaran.