புதுடெல்லி: சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியில் ஆய்வு நடத்துவது தொடர்பாக புதிய உத்தரவு எதையும் வழங்கக் கூடாது என கீழமை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியை அண்மையில் ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே கோயில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து அங்கு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இது கலவரமாக மாறியதில் ஏற்பட்ட உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. 30 போலீஸார் காயமடைந்தனர். மேலும், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.