சம்பல்: சம்பல் வன்முறை சம்பவ வழக்கில் சமாஜ்வாதி எம்பி வீட்டின் அருகில் வசிப்பவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், அந்த வீடுகளில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜமா மசூதியில் இந்து கோயில் இருப்பதாக கூறப்படும் வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கடந்த சில வாரங்களுக்கு முன் மசூதியில் முதல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது நடந்த கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சம்பலில் நடந்த வன்முறை தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்பி ஜியாஉர் ரஹ்மான் பர்க்கின் வீட்டின் அருகிலுள்ள வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். மூன்று வீடுகளில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சம்பல் போலீஸ் எஸ்பி கிரிஷன் பிஷ்னோய் கூறுகையில், ‘சம்பல் பகுதியில் குறிப்பட்ட 13 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அவற்றில் மூன்று வீடுகளில் சந்தேகத்திற்கிடமான விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
முல்லா ஆசிப்பின் வீட்டில் இருந்து மொத்தம் 93 கிராம் ஸ்ம்யாக் மீட்கப்பட்டது. தஸ்வர் மற்றும் நைவர் ஆகியோரின் வீட்டில் கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டது. இந்த மூன்று வீடுகளில் இருந்தவர்கள் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அடுத்தகட்ட விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர, சோதனையின் போது நான்கு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பல் வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 39 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களின் பெயர்கள் மற்றும் முகங்கள் இன்னும் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’ என்று கூறினார்.
The post சம்பல் வன்முறை சம்பவ வழக்கு: சமாஜ்வாதி எம்பி வீட்டின் அருகில் வசிப்பவர்கள் வீடுகளில் ரெய்டு.! ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.