புதுடெல்லி: டிராகன் விண்கலம் பூமியை சுற்றி 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு நேற்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை சுபான்சு சுக்லா படைத்தார். இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்சு சுக்லா, ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டத்தில் இடம் பெற்ற 4 விண்வெளி வீரர்களில் ஒருவராக உள்ளார்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் ஆக்ஸியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனம் ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்க நாசா உதவுகிறது. இத்திட்டத்தில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இணைந்துள்ளது. ஆக்ஸியம்-4 திட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்காக இஸ்ரோ ரூ.550 கோடியை வழங்கி உள்ளது.
இந்தியா இதுவரை மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியதில்லை. வரும் 2027ம் ஆண்டில் இந்த முயற்சிக்காக ககன்யான் திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகிறது. அதில் தேர்வான வீரர்களில் ஒருவர் சுபான்சு சுக்லா. எனவே ககன்யான் திட்டத்திற்கு முன்பாக, ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் சுபான்சு சுக்லா விண்வெளிக்கு செல்வது இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இந்திய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் சுபான்சு சுக்லாவுடன் ஆக்ஸியம்-4 திட்டக்குழுவின் கமாண்டரான நாசா முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னாஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோர் விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர். இத்திட்டத்தில் சுபான்சு சுக்லா விண்கலத்தின் விமானியாக உள்ளார்.
இந்த பயணத்தின் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியர் என்ற சாதனையை சுபான்சு சுக்லா படைத்தார். இதற்கு முன், 1984ல் சோவியத் யூனியனின் விண்கலம் மூலம் இந்திய ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்றார். சுபான்சு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களுடன் புறப்பட்ட டிராகன் விண்கலம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் தனது பயணத்தை தொடங்கியது. இந்த விண்கலம் 28 மணி நேரம் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் நிகழ்வு நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும் என நாசா அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு முன்பாக நேற்று மாலை 4.01 மணிக்கே சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் இணையும் நிகழ்வு தொடங்கப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 400 கிமீ தூரத்தில் விண்வெளியில் அமைந்துள்ளது. இந்த விண்வெளி நிலையம் 28 ஆயிரம் கிமீ வேகத்தில் விண்வெளியில் சுற்றி வருகிறது. அதே வேகத்தில் டிராகன் விண்கலமும் பயணித்து அத்துடன் இணைய வேண்டும். இந்த நிகழ்வை டாக்கிங் என்கின்றனர். வெறும் 14 நிமிடத்தில் டாக்கிங் செயல்பாடுகள் முடிக்கப்பட்டன. இவற்றை நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்தது. சரியாக 4.15 மணிக்கு 12 கொக்கிகள் மூலம் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விண்கலத்தின் கதவுகள் திறக்கும் ஹாட்ச் எனப்படும் சவாலான பணிகள் தொடங்கின. விண்கலத்தின் கதவுகள் திறக்கும் முன்பாக கசிவு உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கிறதா என்பதை நாசா சோதிக்கும். அதன்பின் அழுத்தங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு கதவுகள் திறக்கப்படும். இதற்கு ஓரிரு மணி நேரங்கள் ஆகும். இப்பணிகள் முடிக்கப்பட்டு சரியாக மாலை 6 மணிக்கு விண்கலத்தின் கதவுகள் திறக்கப்பட்டு 4 விண்ெவளி வீரர்களும் ஒருவர் பின் ஒருவராக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்தனர். அவர்களை ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுப்பணி மேற்கொள்ளும் 7 வீரர்களும் வாழ்த்தி வரவேற்றனர்.
சுபான்சு 2வது வீரராக சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்தார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன், ராகேஷ் சர்மா கடந்த 1984ல் சென்ற போது சோவியத் யூனியன் சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் தான் தங்கினார். அப்போது சர்வதேச விண்வெளி நிலையம் கட்டப்படவில்லை. எனவே, முதல் இந்தியராக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்சு சுக்லா நுழையும் நிகழ்வை இந்தியாவே பெருமையுடன் பார்த்தது. ஆக்ஸியம்-4 திட்டத்தின் 4 விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் ஆராய்ச்சி செய்ய உள்ளனர். சுபான்சு சுக்லா, விண்வெளியில் விவசாயம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்து மைல்கல் சாதனை படைத்த சுபான்சுவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
* ‘விண்வெளி பயணத்தில் குழந்தை நான்’
டிராகன் விண்கலத்தில் இருந்தபடி தனது விண்வெளி அனுபவத்தை பகிர்ந்த வீடியோவில் பேசிய சுபான்சு, ‘‘இது ஒரு அற்புதமான பயணம். இது ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல. எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எனக்கு ஆதரவளித்தனர். விண்வெளியில் எப்படி சாப்பிடுவது, எப்படி நடப்பது என்பதை ஒரு குழந்தையை போல கற்றுக் கொள்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தில் நேரத்தை செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்’’ என்றார்.
* ஆய்வு நிலையத்தின் 634வது விண்வெளி வீரர்
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு சென்ற 634வது வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் சுபான்சு சுக்லா பெற்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்ததும், அவரை வரவேற்ற விண்வெளி வீரர்களுக்கு நன்றி தெரிவித்து சுபான்சு சுக்லா பேசுகையில், இந்திய மூவர்ண கொடியுடன் வந்துளேன். அடுத்த 14 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளேன். விண்வெளியில் நிற்பதற்கு சுலபமாக இருந்தாலும், தலை மட்டும் பாரமாக இருக்கிறது. ஆனால், விரைவில் அது சரியாகிவிடும் ’’ என்றார்.
* ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்தோம்
இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா அளித்த பேட்டியில், ‘‘விண்வெளி பயணம் வெற்றிகரமாக நடந்தது. இது மிகவும் பெருமைக்குரிய விஷயம். நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்தோம். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற 4 வீரர்களும் பத்திரமாக பூமிக்கு திரும்ப வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறோம். இந்த பெருமை எனது குழந்தைக்கும், அவரது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் உரியது. அவரது கடின உழைப்பே இந்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது’’ என்றார்.
The post சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் வரலாறு படைத்தார் சுபான்சு சுக்லா: விண்வெளியில் விவசாயம் குறித்து 14 நாட்கள் ஆய்வு செய்கிறார் appeared first on Dinakaran.