இந்திய அறிவியலாளர்கள் என்று சொன்னாலே, நம் நினைவுக்கு முதலில் வருபவர் சர் சி.வி.ராமன்தான். அவர் கண்டறிந்த ‘ராமன் விளைவு’ கோட்பாடு அறிவியல் உலகின் பல்வேறு ஆய்வுகளுக்கும் கண்டறிதல்களுக்கும் இன்று வரை முன்னத்தி ஏராக உள்ளது. இந்த விளைவை ராமன் எப்படிக் கண்டறிந்தார், தெரியுமா? ஒருமுறை கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு ராமன் கப்பல் பயணம் மேற்கொண்டார்.
இயற்கை மீதிருந்த ஆர்வத்தால் வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார் ராமன். அவர் பார்த்த மத்திய தரைக் கடல் பகுதியில் வானம் ஏன் அவ்வளவு நீல நிறமாகக் காட்சியளிக்கிறது என்று சிந்திக்கத் தொடங்கினார். இந்தக் கேள்வி அவருடைய மனதில் ஊடுருவியது. இதற்காகப் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.