மும்பை: கடந்த 2 நாட்களில் நடிகர் சல்மான் கான் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் படப்பிடிப்பின்போது பிஷ்னோய் சமூக மக்கள் கடவுளாக வணங்கும் மானை வேட்டையாடிக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சிறையில் உள்ள நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் தொடர் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாந்த்ரா கிழக்கில் உள்ள கேலக்ஸி அப்பார்ட்மெண்டில் உள்ள சல்மான் கான் விட்டிற்குள் கடந்த 2 நாட்களில் ஆசாமி மற்றும் ஒரு பெண் அத்து மீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை வாலிபர் ஒருவர் சல்மான் கான் வீட்டிற்குள் நுழைந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து வெளியே செல்லும்படி கூறினர். பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர் தனது செல்போனை தரையில் போட்டு உடைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் மாலை அதே வாலிபர் காரில் வந்து சல்மான்கான் வீட்டிற்குள் நுழைய முயன்றார், அவரை போலீசார் தடுத்து நிறுத்தி பாந்த்ரா போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் வாலிபர் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர குமார் சிங்(23) என தெரியவந்தது. தான் சல்மான் கானை சந்திக்க வந்தேன். போலீசார் அனுமதிக்காததால் உள்ளே நுழைய முயன்றேன் என கூறினார். இதேபோல் நேற்று முன்தினம் இஷா சாப்ரா(32) என்ற பெண் அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்து சல்மான் கான் வீடு வரை சென்றார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, சல்மான்கானை கடந்த 6 மாதங்களாக எனக்கு தெரியும். அவர்தான் என்னை வீட்டுக்கு அழைத்தார் என்று கூறியுள்ளார். இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சல்மான் கான் வீட்டுக்குள் நுழைந்த 2 பேர் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.