லக்னோ : உ.பி. பிரயாக்ராஜில் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் நிலையில், இன்று தை அமாவாசையையொட்டி, அதிகாலையிலேயே பல லட்சம் பக்தர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கும்பமேளாவில் நடந்த துயர சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. தவறான நிர்வாகம், கட்டுப்பாடின்மை மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பதிலாக விஐபி-களுக்கு சிறப்பு கவனம் ஆகியவைதான் இந்த துயர சம்பவத்துக்கு காரணம்! விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அரசு சிறந்த ஏற்பாடுகளை செய்து, இது போன்ற துயர சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு தனது நிர்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.
அதே போல், மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே விடுத்த இரங்கல் செய்தியில், “கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகள், VIPகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவைதான் காரணம். பல கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு மோசமான ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பக்தர்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, மற்றுமோர் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க வேண்டும்”இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.
The post சாதாரண பக்தர்களுக்கு பதிலாக விஐபிக்களுக்கு சிறப்பு கவனம் :கும்பமேளா துயர சம்பவத்திற்கு ராகுல் காந்தி வேதனை!! appeared first on Dinakaran.