நடைமுறையில் சாதி அழிவில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன?
தமிழகத்தில் சாதிகளுக்கு எதிரான சிலம்பங்கள் சுற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், சுற்றுபவர்கள் காற்றில் சுற்றுகிறார்கள். எதிரில் யாரும் இருக்கக் கூடாது என்ற கவனத்தோடு சுற்றுகிறார்கள். யாரைக் கேட்டாலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், எனது சாதியைத் தவிர என்ற பதில் சொல்லாமல் விடப்பட்டாலும் கேள்வி கேட்பவருக்கு அதுதான் பதில் என்பது எளிதாகப் புரிந்துவிடும். சாதிகளுக்கு எதிராகப் பல ஆண்டுகளாக வலுத்த குரல்கள் எழுந்திருக்கின்றன. இந்தக் குரல்களுக்குச் சொந்தக்காரர்களில் பலரை நாம் ‘வானுறை தெய்வத்திற்கு’ நிகராக வைத்திருக்கிறோம். ஆனால், சாதி நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது.
நான் அலாஸ்கா சென்ற கப்பலில் என்னுடன் இரு இந்தியப் பயணிகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் டாக்டர். கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு அவரது மூதாதையர்கள் குஜராத்திலிருந்து சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து இவர் கனாடாவில் குடியேறியிருக்கிறார். மூன்று பெண்கள் அவருக்கு. ஒரு பெண் அவர் சாதிப் பையனையே மணம் செய்திருக்கிறார். ஒருவர் திருமணம் ஆகாதவர். மூன்றாமவர் வெள்ளையர் ஒருவரை மணந்துகொண்டதில் டாக்டருக்கு ஏக வருத்தம். “அங்கே கருப்பர் கையில் அகப்படக் கூடாதென்று இங்கு வந்தால், இங்கே வெள்ளைக்காரன் கையில் அகப்பட்டுக்கொண்டாள்.” மூன்றாவது பெண்ணுக்குத் தனது சாதியில் மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இரண்டாவது பயணி தமிழர். 50 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்கா சென்றவர். தனது பெண் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதைப் பெருமையாகச் சொன்னார். “எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். பையன் நம்மவனா அமைஞ்சதுல.” நாம் எங்கு இருந்தாலும் எங்கு சென்றாலும் சாதி நம் பின்னால் நிழல் போலத் தொடர்கிறது. நாமும், தொடர்கிறதா என்பதைத் திரும்பிப் பார்த்து, தொடர்கிறது என்று தெரிந்துகொள்வதில் மகிழ்ச்சிகொள்கிறோம்.
அம்பேத்கர்
அருந்ததி ராய் அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு’ புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில், சாதிகள் ஒழிய வேண்டுமென்றால் அம்பேத்கரைப் படிக்க வேண்டும் என்கிறார். அம்பேத்கர் அந்தப் புத்தகத்திலேயே சாதி ஒழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
1. சாதி, இந்துக்களை அழிவின் பாதையில் இட்டுச் செல்கிறது.
2. இந்து மதம் சுதந்திர, சமத்துவ மற்றும் சகோதரத்துவக் கொள்கைகளின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
3. இது நடக்க வேண்டுமானால் இந்து மதம் சாதிக்கும் வருணத்துக்கும் ‘புனித ஒப்புதல்’ தருகிறது என்ற எண்ணம் ஒழிய வேண்டும்.
4. சாதியும் வருணமும் ஒழிக்கப்பட வேண்டுமென்றால், சாஸ்திரங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவை என்ற எண்ணம் கைவிடப்பட வேண்டும்.
அம்பேத்கர் இதை எழுதியது கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று எந்தக் குறிப்பிடத் தக்க மதத் தலைவரும் சாதிக்கு இந்து மதம் ஒப்புதல் தருகிறது என்று வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். சாஸ்திரங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவை என்று அவர்களில் சிலர் சொன்னாலும், சாஸ்திரங்கள் சொன்னவற்றை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடமிருந்து – குறிப்பாக தமிழ் மக்களிடமிருந்து – சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்படிக் கடைப்பிடிப்பவர்கள் தனியாக அறியப்படுவதே அவர்கள் சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதற்குச் சான்று. அவர்களைப் பழமையின் எச்சங் களாகவே சாதாரண மக்கள் கருதுகிறார்கள். அரசியல் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமை களும் இந்து மதச் சட்டங்களும் இந்துக்களின் எல்லாச் சாதிகளையும் ஒரே தட்டிலேயே வைத்திருக்கின்றன. ஆனால், நடைமுறையில் சாதி அழிவில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன?
சாதியின் காரணம்
தூய்மை-தீட்டுச் சடங்குகள் கடைப்பிடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சாதிய அடுக்குநிலை இருந்திருக்கலாம். இதில் ஒவ்வொரு சாதியின் இடமும் அடையாளமும் ஏறத்தாழத் தெளிவாக அறியப்பட்டிருக்கலாம். சமூகவியலாளர்கள் இடையே இதைப் பற்றிப் பல கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. ஆனால், இன்றைக்கு ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவரும் சாதிய அடுக்கில் தனது சாதியின் இடம் என்ன என்பதைவிடத் தனது சாதியின் அடையாளம் மற்றும் பெருமைகள் என்ன என்பதை அறிவதிலும் அவற்றைப் பரப்புவதிலுமே கவனம் செலுத்துகிறார்கள். இது ஏறத்தாழ எல்லா சாதிகளுக்கும் பொருந்தும். பிராமணர்களில் சிலர் தாங்கள்தான் உயர்ந்த சாதி என்று தங்களுக்குள்ளேயே சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால், 99% மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே, அவர்கள் உயர்வு-தாழ்வு சர்ச்சையில் இறங்குவதைவிடத் தங்களது அடையாளங்களில் மிகுந்த நம்பிக்கை கொள்ளவே முயல்கிறார்கள். இது ஒவ்வொரு சாதியிலும் வெவ்வேறு வகையில் நிகழ்கிறது.
அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள, ஒவ் வொரு சாதியினரும் தங்கள் கலாச்சாரப் பிம்பங்களை யும் சடங்குகளையும் மறுபார்வை செய்துகொண்டே இருக்கின்றனர். பிம்பங்களும் சடங்குகளும் காலத்துக் கேற்ப மாற்றம் அடைந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அவை அந்தந்த சாதியைச் சேர்ந்தவையாகவே இருக் கின்றன. சில பிம்பங்களும் சடங்குகளும் எல்லாச் சாதியினருக்கும் பொது என்று சொல்லப்பட்டாலும், அவற்றுக்கு சாதி சார்ந்த தெளிவான அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டின் எந்த வைணவக் கோயிலுக்கும் ‘தென்கலை’, ‘வடகலை’ அடையாளங்கள் இருக்கும். வழிபாட்டு முறைகளில் கடைப்பிடிக்கப்படும் சில நுட்பமான வேறுபாடுகள் அந்த அடையாளங்களை அறிவித்துக்கொண்டே இருக்கும். இதைத் தவிர, சாதி எந்த விதத் தடையுமின்றி இயங்குவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
கலப்புத் திருமணங்கள்
அம்பேத்கர் தன்னுடைய ‘சாதி ஒழிப்பு’ புத்தகத்தில் சாதியை ஒழிக்க வேண்டுமானால் கலப்புத் திருமணங்கள் செய்வதுதான் ஒரே வழி என்று குறிப்பிடுகிறார். இதை பெரியார் சொல்லியிருக்கிறார். காந்தியும் பின்னால் இத்தகைய திருமணங்களை முழுவதும் ஆதரித்திருக்கிறார். இந்தியாவில், சுதந்திரத்துக்குப் பின் தோன்றிய எந்தப் பெரிய தலைவரும் சாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லியதாக எனக்குத் தெரியவில்லை. சட்டங்களும் திருத்தப்பட்டுவிட்டன. சாதிக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கணக்கிலடங்காதவை. ஆனாலும், கலப்புத் திருமணங்கள் அதிகம் நடப்பதாகத் தெரியவில்லை.
2005-ம் ஆண்டு இந்தியா முழுவதும் மிகப் பெரிய கணக்கெடுப்பு (பெண்களுக்கு மத்தியில்) நடத்தப்பட்டது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி தெளிவானது: உங்கள் கணவர் நீங்கள் பிறந்த சாதியைச் சேர்ந்தவரா? கொடுத்த பதில்களை ஆராய்ந்ததில் இந்தியா முழுவதும் கலப்புத் திருமணங்களின் சதவீதம் 1981-ல் 3.5 ஆக இருந்தது 2005-ல் 6.1 ஆக உயர்ந்திருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. அதாவது, வருடத்துக்கு 0.1% கலப்புத் திருமணங்கள் அதிகரித்திருக்கின்றன. இதே நிலைமை நீடித்தால், இந்தத் திருமணங்கள் 50% அதிகரிப்பதற்கு ஏறத்தாழ 500 ஆண்டுகள் எடுக்கும்! தமிழ்நாட்டின் நிலைமை மிக மோசம். கலப்புத் திருமணங்களின் சதவீதம் 2005-ம் ஆண்டு 2.2% மட்டுமே. கலப்புத் திருமணம் அதிகம் நடக்கும் முதல் மூன்று மாநிலங்கள் – பஞ்சாப் 12.2%, மேற்கு வங்கம் 9.3%, குஜராத் 8.2%. 1,000 ஆண்டுகளுக்குப் பின்னும் தமிழ்த் திருநாட்டில் சாதிகள் வலுவாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனாலும், 1,000 ஆண்டுகளுக்குப் பின்னும் ‘பெரியார் பிறந்த மண்’ என்று சொல்லிக்கொண்டிருப்போம் என்பது நிச்சயம்.
பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com
பின்குறிப்பு: Journal of Comparative Family Studies என்ற இதழில் வெளியான ‘Exploring the myth of mixed marriages’ என்ற ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில புள்ளிவிவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
-தி இந்து