டெல்லி : சாதிவாரி கணக்கெடுப்பதை நடத்தும் போது, பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பிரதமர் மோடிக்கு கார்கே எழுதி உள்ள கடிதத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று வெறும் மேம்போக்காக அறிவித்தால் மட்டும் போதாது என்று தெரிவித்துள்ளார். உரிய திட்டமிடல் மூலம் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்போது கேட்கப்படும் கேள்விகளை தொகுத்து முன்கூட்டியே வெளியிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது வெறும் எண்ணிக்கையிலானதாக இருக்கக் கூடாது என்றும் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், இவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இடஒதுக்கீடு உள்ளிட்ட ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு இருக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு கார்கே அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள இடஒதுக்கீடு சட்டங்கள் பல்வேறு சமூக மக்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் அளித்து வருகிறது என்றும் இது போன்ற நிலை தொடர நாடு முழுவதும் உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து, அனைத்து சமூக மக்களுக்கும் அவர்களுக்கான உரிமை மற்றும் பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்கே கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post சாதிவாரி கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளை தொகுத்து முன்கூட்டியே வெளியிட வேண்டும் : பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!! appeared first on Dinakaran.