ஐதராபாத்: தெலங்கானா மாநிலம், மிரியாலகுடாவைச் சேர்ந்த அம்ருதவர்தினி என்பவர், தனது இளம் வயது நண்பரான பிரணய் பெருமல்லா என்பவரைக் காதலித்தார். இதற்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்தனர். இளம் தம்பதி தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கர்ப்பமாக இருந்த அம்ருதவர்தினியை, அவரது காதல் கணவர் மருத்துவப் பரிசோதனைக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த கும்பல், அரிவாளால் வெட்டி அவரைக் கொன்றது. தெலங்கானாவை உலுக்கிய கவுரவக் கொலை வழக்கில், பெண்ணின் தந்தை மாருதி ராவ் கூலிப்படைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து கொலை செய்யத் தூண்டியது அம்பலமானது. இதையடுத்து, மாருதி ராவ் உட்பட 8 பேரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மிரியாலகுடாவில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, ஜாமீனில் வெளிவந்த மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், ன கூலிப்படை தலைவன் சுபாஷ் குமார் என்பவருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் உட்பட எஞ்சிய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
The post சாதி ஆணவக் கொலை வழக்கில் கூலிப்படை தலைவனுக்கு தூக்கு: 6 பேருக்கு ஆயுள், தெலங்கானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.