சிதம்பரம்: காவலரை கத்தியால் வெட்டி விட்டு தப்பிக்க முயன்ற பிரபல கொள்ளையனை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை சித்தன் சாலையை சேர்ந்தவர் கஜேந்திரன்(35) வீட்டில் கடந்த 18ம் தேதி தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றார். புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சிதம்பரத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் மெயின் ரோடு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வேகமாக வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அதில், அவர் கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளை அருகே பிள்ளையார்குணம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன்(38) என்பதும், இவர் கஜேந்திரன் வீட்டில் நகையை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து ஸ்டீபனை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்து, 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சித்தலப்பாடி சாலை ஓரமுள்ள ஒற்றை பனை மரம் அருகில் திருடுவதற்காக பயன்படுத்திய இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களை புதைத்து வைத்திருப்பதாக ஸ்டீபன் கூறியதாக தெரிகிறது. அதனை கைப்பற்ற நேற்று அதிகாலை 6 மணி அளவில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு ஸ்டீபனுடன் சென்றுள்ளனர்.
சித்தலப்பாடி சாலையில் ஒற்றை பனைமரம் முட்புதர் அருகே சென்றதும், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் ஞானப்பிரகாசத்தை கையில் வெட்டி விட்டு, ஸ்டீபன் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தற்காப்பிற்காக துப்பாக்கியால் ஸ்டீபனை காலில் சுட்டார். இதில் ஸ்டீபனுக்கு கால் முட்டியின் கீழ்பகுதியில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
காயமடைந்த காவலர் ஞானப்பிரகாசமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் சுட்டு பிடித்த கொள்ளையன் ஸ்டீபன் மீது கன்னியாகுமரி, திருச்சி, ஈரோடு, திருப்பூர் நகரம், திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், சிவகங்கை, கடலூர் மாவட்டம் மற்றும் கேரளா மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட வழிப்பறி, திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது.
* பகலில் மட்டும் கைவரிசை அழகிகளுடன் உல்லாசம்
கொள்ளையன் ஸ்டீபன் பகல் நேரங்களில் மட்டுமே திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவாராம். வெள்ளை கலர் பைக்கில் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதும், பகல் நேரங்களில் ஒவ்வொரு வீட்டையும் நோட்டமிட்டு, அதில் பூட்டி இருக்கும் வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டும் வந்துள்ளார். மேலும் கொள்ளையடிக்கும் பொருட்களை உடனே விற்று காசாக்கி விடுவதும், திருடிய பணத்தை அழகிகளுக்கு வாரி வாரி வழங்கி உல்லாசமாக இருந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
The post சிதம்பரத்தில் காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு appeared first on Dinakaran.