சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் காந்தி சாலையை சேர்ந்தவர் சந்திரசேகர்(50). இவர் தனது வீட்டின் தரைதளத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். மேல்தளத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று காலை சுமார் 7 மணியளவில் சந்திரசேகர் தனது வீட்டு மாடியில் நின்றிருந்தார். அப்போது அவரது வீட்டு வெளியே தமிழக பதிவெண் கொண்ட கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 7 பேர் கும்பல் துப்பாக்கி மற்றும் இரும்பு ராடுடன் மேல் தளத்திற்கு வந்தனர்.
இதைக்கண்ட சந்திரசேகர் அதிர்ச்சியடைந்து, `நீங்கள் யார்?, எதற்காக வந்துள்ளீர்கள்?’ என கேட்டார். அப்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் சந்திரசேகரை அந்த கும்பல் சரமாரி தாக்கியது. பின்னர் அவரை தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தது. அதற்குள் சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டனர். இதனிடையே படுகாயமடைந்த சந்திரசேகர் சுதாரித்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்த அந்த கும்பலை வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டு சிறைபிடித்தார்.
பின்னர் சந்திரசேகர் கூச்சலிட்டார். தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். வீட்டில் பதுங்கி இருந்த 5 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த 3 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் இரும்பு ராடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் காரை சோதனை செய்தபோது அதில் `ஊடகம்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் காரில் கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.
இதையடுத்து 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், செல்போன் எண் சிக்னலை ஆய்வு செய்து தப்பியோடியவர்களில் ஒருவரை வடலைப்பேட்டையில் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை திருப்பதியில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த 6 பேரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், `சம்பவம் நடந்த வீட்டை ஒட்டி தனியார் வங்கி உள்ளது. வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இவர்களது வீட்டிற்குள் அந்த கொள்ளை கும்பல் பதுங்க வந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
The post சித்தூர் வங்கியில் கொள்ளையடிக்க வந்த 6 பேர் கும்பல் சிக்கியது: காரில் ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.