இஸ்லாமாபாத்: சிந்து நதியில் தண்ணீர் திறக்காவிட்டால் அதில் இந்தியர்களின் ரத்தம் ஆறாக ஓடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ-சர்தாரி தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் பலியான நிலையில், இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானில் பாயும் சிந்து நதியில் திறக்கப்படும் தண்ணீரை உடனடியாக நிறுத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
இந்த நதிக்கரையின் பகுதியில்தான் சுமார் 70 சதவீத பாகிஸ்தான் மக்கள் வசித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் இந்த முடிவால் அந்த நாட்டுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிந்து நதியில் தண்ணீரை திறக்காவிட்டால் அந்த நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என்று பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ-சர்தாரி மிரட்டல் விடுத்துள்ளார்.
சிந்து நதிக்கரையோரம் அமைந்துள்ள சுக்கூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
மோடி தனது சொந்த பலவீனங்களை மறைத்து இந்திய மக்களை ஏமாற்றுகிறார். சிந்து நதி பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்று இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதற்கு ஆதாரம் சிந்து நதி நீர் ஒப்பந்தம். தற்போது அதனை ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைக்க அவர் முடிவு செய்துள்ளது. சிந்து நதிக்கரையில் உள்ள சுக்கூரில் நின்றுகொண்டு கூறுகிறேன். சிந்து நதி எங்களுடையது.
எந்த காலத்திற்கும் எங்களுடையதாகவே இருக்கும். சிந்து நதியில் தண்ணீர் பாயும். இல்லையென்றால் இந்தியர்களின் ரத்தம் ஆறாக ஓடும்’ என்று பேசினார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சிந்து நதியில் தண்ணீர் திறக்காவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஆறாக ஓடும்: பாகிஸ்தான் மாஜி அமைச்சர் கொக்கரிப்பு appeared first on Dinakaran.