டெல்லி: பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இரு நாடுகள் இடையிலான ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அதிரடியாக முடிவு எடுத்து இருப்பது எப்படி என்பது பின்வருமாறு;
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இந்த தடை தொடரும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் ஏற்படும் போதெல்லாம் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது குறித்த விவாதம் எழுவது வாடிக்கையாக உள்ளது. கார்கில் உள்ளிட்ட பாகிஸ்தான் உடனான 3 பேர்களின் போது கூட சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படவில்லை.
இந்த சூழலில் தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஒரு நாடு நிறுத்தி வைக்க முடியுமா என சில கேள்வி எழுப்புகின்றனர். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் படி எந்த நாடும் தன்னிச்சையாக மாற்றம் மேற்கொள்ள முடியாது. ஒப்பந்தத்தை மாற்றி அமைக்கவோ, புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொள்ளவோ இரு நாடுகளின் ஒப்புதலும் தேவை. எனினும் வியன்னா ஒப்பந்தம் படி பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் தங்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது என கூறி இந்திய ஒப்பந்தத்தில் இருந்து விலக முடியும். அடிப்படையான நிபந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டால் எந்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்யலாம் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் பாகிஸ்தானுக்கு மிக குறைவாகவே உள்ளன. சர்வதேச நீதிமன்றம் அல்லது நிறைந்த நடுவர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முறையிடலாம். ஆனால், இந்தியா எழுப்பும் பயங்கரவாத பிரச்சனைகள் காரணமாக இதுபோன்ற வழக்குகளில் பாகிஸ்தானுக்கு சட்டபூர்வ தீர்வு கிடைப்பது கடினமானது. நீதிமன்றத்திற்கு பதிலாக உலக வங்கியிடமோ, சீனா அல்லது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிடமோ ஆதரவு கோர பாகிஸ்தான் முயலலாம். ஆனால், பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரம் அதற்கான வாய்ப்புகளை தடுப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
The post சிந்து நதி நீர் நிறுத்தம்.. இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஒரு நாடு நிறுத்தி வைக்க முடியுமா?: சர்வதேச நீதிமன்றம் விளக்கம்!! appeared first on Dinakaran.