புதுடெல்லி: மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஒன்றிய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், ஒன்றிய அரசு அடுத்தகட்ட நடவடிக்கையாக, சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கும் விதிமுறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மாற்றம் செய்துள்ளது. இதற்கு கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புதிய தேசியக் கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் ஒன்றிய பாஜ அரசு தீவிரமாக உள்ளது. இதில் உள்ள மும்மொழிக் கொள்கை மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட அம்சங்களை தமிழ்நாடு அரசு ஏற்காததால், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே பிஎம் உள்ளிட்ட திட்டங்களில் ஒதுக்கப்படும் நிதி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சகம் மிரட்டி வருகிறது. இது மாநில அரசை பிளாக் மெயில் செய்வது போல் இருப்பதாக கூறி உள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் என கூறினாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறி உள்ளார்.
இந்நிலையில், ஒன்றிய அரசு அடுத்தகட்ட நடவடிக்கையாக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதிமுறையில் முக்கிய திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அங்கீகார குழு கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியது. இதன்படி, சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகார சட்டம் 2018ல் பிரிவு 2.3.5ல் திருத்தம் செய்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க இனி மாநில அரசின் அனுமதி தேவையில்லை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் அவசியம் தர வேண்டும். தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி, மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் கட்டாயமில்லை. தடையில்லா சான்றிதழ் இல்லாமலேயே சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கி ஒன்றிய அரசிடம் அனுமதி கோரலாம்.
இது தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் மாநில அரசின் கருத்தை கேட்டு கடிதம் அனுப்பும். இந்த கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால், சம்மந்தப்பட்ட மாநில பள்ளி கல்வித் துறைக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். அதற்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்காதபட்சத்தில், எந்த ஆட்சேபனையும் இல்லை என கருதப்பட்டு சிபிஎஸ்இ அனுமதி வழங்கும். இது முற்றிலும் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசே தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு விடும். மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே எந்த தனியார் பள்ளியும் சிபிஎஸ்இ பள்ளியாக அங்கீகாரம் பெற இந்த திருத்தம் வழிவகுக்கும். இதன் மூலம், அனைத்து மாநிலங்களிலும் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க ஒன்றிய அரசின் குறுக்கு வழி முயற்சியாகவே இதை கல்வியாளர்கள் பார்ப்பதாக கூறுகின்றனர். இதன் மூலம் பின்வாசல் வழியாக தேசிய கல்விக் கொள்கையை நுழைக்க ஒன்றிய அரசு முயற்சித்துள்ளது. சிபிஎஸ்இ நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்களும் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
The post சிபிஎஸ்இ பள்ளி தொடங்கும் விதிமுறையில் மாற்றம் மாநில அரசின் அதிகாரம் பறிப்பு: கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.