புதுடெல்லி: சிறைகளில் சாதிய பாகுபாடு களையப்பட்டு விட்டதா என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சுகன்யா சாந்தா என்பவர் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் சாதிய பாகுபாடு நிலவுவதாகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த கைதிகள் தனி சிறையிலும், மற்ற சமூகத்தினர் தனி சிறையிலும் அடைக்கப்பட்டிருப்பதாகவும், சிறையில் வழங்கப்படக்கூடிய வேலைகளும் சாதிய அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து முன்னதாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,‘‘சாதிய பாகுபாடுகளை சிறைச்சாலைகளில் களையும் வகையில் மாதிரி சிறை கையேடு 2016 மற்றும் மாதிரி சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டம் 2023 ஆகியவற்றில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் திருத்தங்களை ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்று மனுதாரர் சுகன்யா சந்தா தரப்பிலான வழக்கறிஞர் முரளிதர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து அந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின்படி சிறை கையேடுகள் மற்றும் விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட்டுவிட்டதா?. அதேப்போன்று சிறைகளில் சாதிய பாகுபாடு களையப்பட்டு விட்டதா என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்த நிலை அறிக்கையை தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும் ஒன்றிய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இந்த விவகாரத்தில் கடைசி வாய்ப்பை வழங்குவதாகவும், எனவே சிறை கையேடுகள் மற்றும் விதிகளை பரிசீலனை செய்ததற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
The post சிறைகளில் சாதிய பாகுபாடு களையப்பட்டு விட்டதா? ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.