இந்திய அரசமைப்பின் மிகச்சிறந்த கூறுகளில் ஒன்றாக மிளிர்வது நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை. தேர்தல் மறுசீரமைப்பு, தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) ஆகிய இரண்டும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத் தூண்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் நடத்துவதும், தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்வதும் உள்ளபடியே சிக்கலான பிரச்சினைகள்.
அதிலும், தொகுதிகள் மறுசீரமைப்பு என்பது வெறும் எண்ணிக்கை தொடர்பான விஷயம் என்று எளிதில் கடந்து போய்விடக்கூடியதல்ல. குடிமக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம், மாநில உரிமைகள், கூட்டாட்சி முறையின் கதியை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய விஷயம் இது.