புதுடெல்லி: ஒன்றிய அரசு, நடப்பு 2025-26ம் நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் ஃபாஸ்டேக் சுங்கக் கட்டணம் மூலம் ரூ.20,682 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. வரும் ஆக. 15ம் தேதி முதல் புதிய வசூல் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்படும் சுங்கச்சாவடிகள் மூலம் ‘ஃபாஸ்டேக்’ சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது. ஒன்றிய அரசு, நடப்பு 2025-26ம் நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில்(ஏப்ரல், மே, ஜூன்) மட்டும் ஃபாஸ்டேக் சுங்கக் கட்டணம் மூலம் ரூ.20,682 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை விட 19.6% அதிகம் என்று தேசிய மின்னணு சுங்க வசூல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மட்டும் சுங்கக் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை 16.2% அதிகரித்து, சுமார் ரூ.117.6 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை 4 முதல் 5 சதவீதம் வரை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியது. இந்த நிலையில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டியில், ‘வாகன ஓட்டிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதியதாக வருடாந்திர ஃபாஸ்டேக் திட்டம் கொண்டு வரப்படும். இந்த புதிய திட்டம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இதன்படி, ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தி 200 பயணங்கள் வரை மேற்கொள்ளலாம். அதாவது ஒரு பயணத்திற்கு வெறும் ரூ.15 மட்டுமே செலவாகும். இந்த வருடாந்திர திட்டத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பாதவர்களுக்காக, பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் மற்றொரு திட்டமும் உள்ளது.
அதன்படி, அவர்கள் 100 கிலோமீட்டர் பயணிக்க ரூ.50 செலுத்தினால் போதுமானது. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் வருடாந்திர திட்டம், தற்போதைய ஃபாஸ்டேக் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தியே செயல்படுத்தப்படும். எதிர்காலத்தில் சுங்கச்சாவடிகளுக்குப் பதிலாக ஜி.பி.எஸ் மற்றும் தானியங்கி வாகன கண்காணிப்பு தொழில்நுட்பம் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்’ என்று அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். முன்னதாக 15 ஆண்டுகளுக்கான ரூ.30,000 மதிப்புள்ள ‘வாழ்நாள் ஃபாஸ்டேக்’ திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சுங்கச்சாவடி வருவாயை குவிக்கும் ஒன்றிய அரசு; ‘பாஸ்டேக்’ மூலம் 3 மாதத்தில் ரூ.20,682 கோடி வசூல்: ஆக. 15ம் தேதி முதல் புதிய திட்டம் அமல் appeared first on Dinakaran.