திருப்பூர், பிப்.19: இந்திய வாகனங்களில் அங்கீகாரம் மற்றும் அதிகாரம் மிக்க பதவியில் உள்ளவர்கள் மட்டுமே இந்திய தேசிய கொடியை தங்கள் வாகனங்களில் அமைத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால், சாதாரண பொதுமக்கள் யாரும் தங்கள் வாகனங்களில் தேசியக் கொடியை பயன்படுத்த முடியாது. ஆனால், இந்தியாவில் உள்ள சுற்றுலா வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்டவற்றை அலங்கரித்து ஓட்டுவது என்பது வாகன ஓட்டிகளுக்கு தனி பிரியமாக இருந்து வருகிறது. வண்ண வண்ண தோரணங்கள், வண்ண வண்ண விளக்குகள், ஆட்டோ மற்றும் பேருந்துகள் மீது கொம்பு போன்ற வடிவங்கள், முகப்பு கண்ணாடிகளில் கடவுளின் படங்கள், தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள், தங்களுக்கு பிடித்த இசை அடங்கிய ஏர் ஹாரன்கள் என வரைந்து அழகுப்படுத்தியவர்கள் தற்போது ஒரு படி மேல் சென்று வெளிநாட்டு கொடிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
திருப்பூர் பல்லடம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வாகனங்கள் இரண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு கொடிகள் முன் பகுதியில் கட்டப்பட்டிருந்தது. வாகனத்தின் பல்வேறு பகுதிகளில் இங்கிலாந்து நாட்டு கொடிகள் அடங்கிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு இருந்தது. பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் அதிக அளவு நடைபெற்று வரக்கூடிய திருப்பூரில் வெளிநாட்டினர் வருகை எப்போதும் இருக்கும். திருப்பூரில் இது போன்ற வாகனங்களில் வெளிநாட்டு கொடிகள் இருப்பது வெளிநாட்டினரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவை சட்ட விதிகளின்படி எந்தவித தவறும் இல்லை என்றாலும் கூட ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தவறாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால் வாகன ஓட்டிகளுக்கு அபராதம், வழக்குப்பதிவு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
The post சுற்றுலா வாகனங்களை அலங்கரிக்கும் வெளிநாட்டு கொடிகள்: விதிமீறலா? appeared first on Dinakaran.