மும்பை: சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் சிபிஐ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. பாலிவுட் நடிகரான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மும்பை பாந்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய மும்பை காவல்துறை, சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கு முடித்தநிலையில், அவருக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாகவும், அவரது காதலியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சவுபிக் சக்ரபோர்த்தி, சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாம்யூல் மிராண்டா ஆகியோர் சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டனர்.
அதேநேரம் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கின் இறுதி அறிக்கையை மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில், சுஷாந்த் சிங் மரணமடைந்து சுமார் 4 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கடந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்தின் தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் மற்றும் சுஷாந்தின் குடும்பத்தினர் மீது ரியா சக்ரபோர்த்திய கூறிய குற்றச்சாட்டுகள் ஆகிய இரண்டு வழக்குகளிலும், இருதரப்பிலும் வழக்கை முடித்து வைக்கும்படி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தற்போது ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றமற்றவர்கள் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், மேற்கண்ட நபர்களுக்கும் இந்த சுஷாந்தின் மரணத்திற்கும் தொடர்பில்லை என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. அதேநேரம் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி யாருக்கு எதிராகவும் சிபிஐ எவ்வித ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post சுஷாந்த் சிங் மரண வழக்கில் திருப்பம்; நடிகை ரியா குற்றமற்றவர்!: நீதிமன்றத்தில் சிபிஐ சர்டிபிகேட் appeared first on Dinakaran.