சென்னை: "சேலம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் நியமனத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர் பணியிடங்களும் இந்திய ஆட்சிப்பணியில் உள்ள அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டின் வருவாயிலும், நிலப்பரப்பிலும் பெரிய 6 மாநகராட்சிகளில் ஒன்றான சேலம் மாநகராட்சியின் ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அல்லாத அதிகாரியான முனைவர் இளங்கோவன் நியமிக்கப்பட்டிருப்பதில் அப்பட்டமான விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாகவும், ஆட்சியாளர்களின் விருப்பங்களை எதிர்கேள்வி எழுப்பாமல் நிறைவேற்றுபவர் என்பதால் தான் அவர் சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப் பட்டிருக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக முறைகேடுகளின் களமாக மாற்ற தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.