மும்பை: மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சைப் அலிகான் வீட்டிற்குள் கடந்த கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த மர்ம நபர், நடிகரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த சைப் அலிகான் அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வருகிறார். இதனிடையே சைப் அலிகானை தாக்கிய நபரை பிடிக்க 30 தனிப்படைகள் அமைத்த போலீசார், சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர்கள் குற்றவாளி என உறுதியான பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தானே மாவட்டம் கோட்பந்தர் சாலையில் உள்ள ஹிரானந்தனி எஸ்டேட்டில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், நேற்று சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது, அந்த நபர் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
வங்கதேசத்தில் உள்ள ஜலோகாட்டி பகுதியைச் சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது ரோஹில்லா அமின் பகிர் என்ற அந்த நபர், 5 மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். பிஜோய் தாஸ் என தனது பெயரை மாற்றிக் கொண்டு மும்பையில் தங்கி சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் சைப் அலிகானின் வீடு என்பது தெரியாமலேயே வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட முயன்றதாகவும் கொள்ளை மட்டும் தான் அவரது முக்கிய நோக்கம் என்றும் வேறு எந்த காரணமும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
* ஜன.24 வரை போலீஸ் காவல்
கைது செய்யப்பட்ட அமின் பகிர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவாளி வேறு நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இதில் சர்வதேச சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த போலீசார், அமின் பகிரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வரும் 24ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
The post சைப் அலிகானை தாக்கிய வங்கதேச ஆசாமி கைது: பெயரை மாற்றி தங்கியிருந்தது அம்பலம் appeared first on Dinakaran.