புதுடெல்லி: நாளை போர்க்கால ஒத்திகை எங்கெங்கு நடத்த வேண்டும் என்ற பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள், குதிரை ஓட்டுபவர் ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. 54 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த போர் ஒத்திகையில், எதிரிநாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை நடைபெறுவதை முன்னிட்டு ஒன்றிய உள்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநில அரசு அதிகாரிகளுடன் ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைமை இயக்குனர், தேசிய பேரிடர் மீட்புப்படை இயக்குனர், 244 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து உள்துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், காவல் உயர் அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, நாளை போர்க்கால ஒத்திகை எங்கெங்கு நடத்த வேண்டும் என்ற பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி, ஐதராபாத், விசாகப்பட்டினம், சண்டிகர், அமிர்தசரஸ், பட்டிண்டா, லூதியானா உள்ளிட்ட இடங்களில் போர்க்கால ஒத்திகை நடக்கிறது. பீகாரில் பராணி, பாட்னா, . கத்திகார், பூர்ணியாவில் நடக்கிறது. ஜெய்ப்பூர், அஜ்மீர், ஆல்வார், கார்மர், ஜோர்ஹாத் உள்ளிட்ட இடங்களில் போர்க்கால ஒத்திகை நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை
விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய இடங்களில் ஒத்திகை நடைபெற உள்ளது. இந்த போர் ஒத்திகையின் போது, அனைத்து அணைக்கட்டுகளும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும். ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் ஆலைகளும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒத்திகையில் 5 முக்கிய விஷயங்களை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
* எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஏர் சைரன்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை முக்கிய இடங்களில் நிறுவப்பட்டு உடனடியாக செயல்படும் வகையில் பரிசோதித்தல்.
* எதிரிநாட்டு தாக்குதலின் போது, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும் நடைமுறை, முதற்கட்ட மருத்துவ உதவி, எச்சரிக்கை குறியீடுகளை அடையாளம் காணுதல் போன்ற அடிப்படையான ராணுவ நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
* வான்வழி தாக்குதல் நடக்கும் சமயத்தில், எதிரிகள் குடியிருப்புகளை கண்டறிவதை தடுக்க, மின் சேவையை முழுமையாக நிறுத்தி இருளில் மூழ்கடிக்கும் நடைமுறைகளை செயல்படுத்துதல்.
* அனல்மின் நிலையங்கள், ராணுவ கிடங்குகள், தொலைதொடர்பு மையங்கள் போன்ற முக்கிய கட்டமைப்புகள் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைக்கும் தொழில்நுட்பங்கள்.
* அவசர காலங்களில் தகவல்களை உடனுக்குடன் புதுப்பித்தல் மற்றும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் திட்டங்கள் குறித்து ஒத்திகை பார்த்தல்.
The post சைரன் ஒலி, இரவில் மின்சாரம் துண்டிப்பு: நாடு முழுவதும் நாளை எந்தெந்த இடங்களில் போர்க்கால ஒத்திகை.. எவ்வாறு மேற்கொள்ளப்படும்!! appeared first on Dinakaran.