ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணமடைந்தார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத்தொடர்ந்து நேற்றிலிருந்து இந்தியா – பாகிஸ்தான் மோதல் தீவிரமடைந்தது. இந்தியா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் மூண்டது. இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது, ஆந்திர பிரதேச மாநிலம் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் முரளி நாயக் என்பவர் வீர மரணம் அடைதுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் நேற்று நடந்திருக்கலாம் என்றும், அவரின் உடல் நாளை அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே ராணுவ வீரர் முரளி நாயக்கின் மறைவுக்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த கடினமான நேரத்தில் அவர்கள் அனுபவித்த துன்பங்களை உணர்ந்து, நாயக்கின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டைப் பாதுகாக்கப் பணியாற்றும் ஆயுதப் படைகளில் உள்ளவர்களின் துணிச்சலுக்கு சான்றாக முரளி நாயக்கின் தியாகம் நினைவுகூரப்படும், மதிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
The post ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!! appeared first on Dinakaran.