திருவனந்தபுரம்: சுரேஷ் கோபி நடித்த ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாள படத்தின் பெயரை மாற்றுவது தொடர்பான விவகாரத்தில் மத்திய சினிமா தணிக்கை வாரியத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரவீன் நாராயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் பலரின் நடிப்பில் ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாளப் படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் ஜானகி என்ற பெயரை நீக்க வேண்டும் என்று கூறி மத்திய சினிமா தணிக்கை வாரியம் இந்தப் படத்தை வெளியிட அனுமதி மறுத்தது.
இதை எதிர்த்து சினிமா தயாரிப்பு நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. கடந்த வாரம் இந்த மனு மீது விசாரணை நடைபெற்ற போது மத்திய சினிமா தணிக்கை வாரியத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. ஜானகி என்ற பெயரால் என்ன பிரச்னை இருக்கிறது? இந்தப் பெயரை ஒரு மதத்துடன் ஏன் தொடர்புப்படுத்துகிறீர்கள் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் நேற்று இந்த மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற்றது.
அப்போது நீதிபதி நகரேஷ் கூறியது: படத்திற்கு என்ன பெயர் வைக்க வேண்டும், கதை எப்படி இருக்க வேண்டும் என்பதில் தலையிட மத்திய தணிக்கை வாரியத்திற்கு அதிகாரம் கிடையாது. கலைஞனின் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதற்கு உரிமை கிடையாது. ஜானகி என்ற பெயரை எதற்காக நீக்க வேண்டும் என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். சினிமாவுக்கு பெயர் வைப்பது கலைஞனின் உரிமையாகும். இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கும் தெய்வத்தின் பெயர்தான் உள்ளது. இவ்வாறு நீதிபதி கூறினார். தொடர்ந்து மனு மீதான விசாரணையை நீதிபதி 2ம் தேதிக்கு (நாளை) தள்ளி வைத்தார்.
* தணிக்கை வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா படத்திற்கு அனுமதி மறுப்பதை கண்டித்து திருவனந்தபுரத்தில் உள்ள சென்சார் போர்டு அலுவலகம் முன் மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா மலையாள பட விவகாரம் கலைஞர்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிட சென்சார் போர்டுக்கு உரிமை இல்லை: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.