மும்பை: ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மேலும் குறைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாடு முழுவதும் 2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமுல்படுத்தப்பட்டது. தற்போது 5,12,18,28 சதவீத அடிப்படையில் வரி விகிதங்கள் உள்ளன. இந்த வரிவிகிதம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி ஆலோசனை செய்ய ஜிஎஸ்டி வரி தொடர்பான ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆலோசனை செய்து வரிவிகிதங்களை குறைக்கவும், வரியை மாற்றி அமைக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.
இதுபற்றி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும். வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளை பகுத்தாய்வு செய்யும் பணி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் வருவாய் நடுநிலை விகிதம் (ஆர்என்ஆர்) 15.8 சதவீதத்திலிருந்தது. அது 2023ல் 11.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. தற்போது இன்னும் குறையும். எனவே வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. அந்த வேலை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஜிஎஸ்டி வரி மேலும் குறையும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.