டெல்லி: குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இந்தியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். சூரிய சக்தி மின் திட்டத்திற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடி கணக்கில் லஞ்சம் கொடுத்தாக தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்ற அவைகளில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களது கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் அவைகள் முடக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் நடுநிலை வகிக்காமல், அவையில் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் இந்தியா கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் தன்கர் தொடர்ச்சியாக மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதாக கூறி நாடாளுமன்ற சட்டப்பிரிவு 67B-யின் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பினர்கள் சுமார் 70பேர் இத்தீர்மானத்தில் ஏற்கனவே கையெழுத்து இட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
The post ஜெகதீப் தன்கர் அவையை ஒருதலைப்பட்சமாக நடத்துவதாக புகார்: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கைகோர்க்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்! appeared first on Dinakaran.