புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணையம் சார்பில் பெண்கள் தொடர்பான சைபர் சட்டங்கள் குறித்த இறுதி சட்ட மறுஆய்வு ஆலோசனை மற்றும் சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்று பேசியதாவது: சைபர் குற்றங்கள் என்பது நாம் பெரும்பாலும் அறியாமலேயே சிக்கிக் கொள்ளும் அளவுக்கு உள்ளன. எனவே, பெண்கள் எப்போது வலுவான பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். தங்களின் தனிப்பட்ட தகவல்களை அதிகமாக ஆன்லைனில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். அந்நியர்களுடன் நீண்ட உரையாடல்களைத் தவிர்க்க வேண்டும். ஆன்லைனில் தெரியாத நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது விழிப்புடன் இருக்க வேண்டும். சைபர் குற்றம் நடந்தால், உடனடியாக காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும்.
பெண்களுக்காக ஒன்றிய அரசு இயற்றியுள்ள புதிய சட்டங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தவறான தகவல் பிரச்சாரங்கள், போலி விவரக்குறிப்பு மற்றும் வீடியோ கையாளுதல் உள்ளிட்ட டிஜிட்டல் உலகில் வளர்ந்து வரும் சவால்களை விரிவாகக் கையாள்கின்றன. சைபர் பாதுகாப்பு ஒரு முக்கியமான பிரச்னை. இதில் பெண்களின் தொடர்பை புரிந்துகொள்வது அவசியம். பெண்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சமின்றி தொடர்ந்து பங்களிக்க வேண்டும். சைபர் குற்றங்கள் அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது. ஐடி துறையில் பெண்கள் முன்னணியில் உள்ளனர். இதனால் தொழில்நுட்பம் சார்ந்த எந்த சவால்களையும் தாண்டி வர அவர்கள் தயாராக இருக்கிறார்கள். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு பாலின சமத்துவத்திற்கான ஒரு திருப்புமுனை. இவ்வாறு அவர் கூறினார்.
The post டிஜிட்டல் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் வேண்டும்: ஒன்றிய சட்ட அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.