புதுடெல்லி: டிஜிட்டல் தளங்களில் ஆபாசமான பதிவுகளை ஒழுங்குப்படுத்த கடுமையான சட்ட கட்டமைப்பு தேவை என ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை கூறி உள்ளது. யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் ஆபாசமான, மோசமான பதிவுகள் பெருகிவிட்டன. இவற்றை கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்வது குறித்து பாஜ எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழு ஒன்றிய அரசிடம் கடந்த 13ம் தேதி கேட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ‘‘டிஜிட்டல் தளங்களில் ஆபாசமான மற்றும் வன்முறை பதிவுகளை வெளிப்படுத்த, அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமையான கருத்து சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது சமூகத்தில் கவலைகளை அதிகரித்து வருகிறது.
தற்போதைய சட்டங்களில் சில விதிகள் இருந்தாலும், இத்தகைய மோசமான பதிவுகளை ஒழுங்குப்படுத்த கடுமையான மற்றும் புதிய சட்ட கட்டமைப்பு அவசியமாகிறது. இதை அமைச்சகம் கவனத்தில் கொண்டு புதிய சட்டம் உருவாக்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறது’’ என கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏற்கனவே உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post டிஜிட்டல் தளங்களில் மோசமான பதிவுகளை தடுக்க புதிய சட்டம்: நாடாளுமன்ற குழுவிடம் ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.