நியூயார்க்: அதிபர் டிரம்பின் பரஸ்பர வரிவிதிப்பால் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலைகள் உயரலாம் என்ற அச்சத்தில் அமெரிக்க மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் அதிகளவு வரி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த வரி விதிப்பு ஏப்.2 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தார். அதன் பின்னர் இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.
வரும் 9ம் தேதி முதல் இன்னும் அதிக வரிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த வரி உயர்வு விரைவில் அமலுக்கு வர உள்ள நிலையில் அமெரிக்க மக்கள் பழங்கள், பற்பசை முதல் மின்னணு பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் வரை அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளனர்.
டிரம்பின் அறிவிப்பால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயரலாம் என கூறப்படுகிறது. இதனால் பற்பசை முதல் மின்னணு பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் அலைமோதி வருகின்றனர்.மின்னணு பொருட்கள், ஆடைகள், காலணிகள், வாகன பாகங்கள்,மருந்துகள் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்படுகின்றன. வரும் வாரங்களில் இவை அனைத்தின் விலைகளும் கடுமையாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post டிரம்பின் வரி விதிப்பால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு படையெடுக்கும் அமெரிக்க மக்கள் appeared first on Dinakaran.