புதுடெல்லி: டெல்லியின் 9வது முதல்வராக ரேகா குப்தா நேற்று பதவியேற்றார். ஆளுநர் சக்சேனா அவருக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெல்லியில் கடந்த 5ம் தேதி 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதில், பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜ 48 தொகுதிகளில் வெற்றிபெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு இடத்தையும் பிடிக்காமல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜ 11 நாட்களுக்குப் பிறகு நேற்று முன் தினம் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தி புதிய முதல்வராக ரேகா குப்தாவை (50) தேர்வு செய்தது. இந்தநிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று பதவியேற்பு விழா நடந்தது. இதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மதியம் 12.30 மணியளவில் டெல்லியின் 9வது முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். ஆளுநர் சக்சேனா அவருக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.
பின்னர், துணை முதல்வராகவும், அமைச்சராகவும் பர்வேஸ் வர்மா பதவியேற்றுகொண்டார். அதனை தொடர்ந்து அமைச்சர்களாக ஆஷீஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தரராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ்குமார் சிங் ஆகியோர் பதவியேற்றனர். பின்னர், சட்டமன்றம் சென்ற ரேகா குப்தா முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், முன்னாள் முதல்வர்கள் கெஜ்ரிவால், அடிசி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
* பாஜ.வின் ஒரே பெண் முதல்வர்
டெல்லியில் இதற்கு முன் பாஜ.வை சேர்ந்த மதன்லால் குரானா, சாகிப் சிங் வர்மா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முதல்வர்களாக இருந்துள்ளனர். அந்த வரிசையில், ரேகா குப்தா தற்போது 4வது முதல்வராக பதவியேற்றுள்ளார். அதேபோல், தற்போது பாஜ ஆட்சி செய்யும் 15 மாநிலங்களில், இவர் மட்டுமே பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நாடு முழுவதும் பாஜ.வும், அதன் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சிகளும் 21 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகின்றன. இதில், 15 மாநிலங்களில் பாஜ மட்டுமே தனித்து ஆட்சி நடத்தி வருகிறது. இதில், சமீபத்தில் வெற்றி பெற்ற டெல்லியும் அடங்கும்.
The post டெல்லியின் 9வது முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு appeared first on Dinakaran.