புதுடெல்லி: டெல்லியில் உள்ள முஸ்தபாபாத் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 11 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நேற்று அதிகாலையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இந்தச் சம்பவம் அதிகாலை 3 மணி அளவில் நடந்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று, மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்தத் துயரச் சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளரும் இருப்பது உறுதியாகியுள்ளது.
உயிரிழந்த 11 பேரில் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இடிபாடுகளில் சிக்கி 11 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேர் சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 5 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியிருக்கும் எஞ்சியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் ரேகா குப்தா, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
The post டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 11 பேர் பலி appeared first on Dinakaran.