புதுடெல்லி: டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிமூட்டம் காரணமாக 470 விமானங்கள் தாமதமான நிலையில் 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். தேசிய தலைநகர் டெல்லியில் கடும் பனிப் பொழிவால் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, ஐஜிஐஏ விமான நிலையத்தில் 470 விமானங்கள் தாமதமாகின.
இதுகுறித்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘400க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. எனினும், எந்த விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை’ என்றார். அதேபோல் டெல்லியில் இருந்து புறப்படும் 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரயில்வே ரயிலை ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளது. விமான கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, டெல்லிக்கு பல்வேறு பகுதியில் இருந்து வரும் விமானங்களில் 470 விமானங்கள் தாமதமாக வந்துசேர்ந்தன. டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (டிஐஏஎல்) நேற்று வெளியிட்ட பதிவில், விமானம் குறித்த ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு பயணிகளிடம் கேட்டுக்கொண்டது.
வரும் நாட்களில் வானிலை மேலும் மோசமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கில் இருந்து மணிக்கு 4 கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post டெல்லியில் கடுமையான பனிமூட்டம்; 470 விமானங்கள் தாமதம் 95 ரயில்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.