டெல்லி: நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 இலக்குகள் மீது இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் உடனடியாக எல்லைக்கு செல்ல பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. ராஜ்நாத் சிங், அமித் ஷா, கிரண் ரிஜிஜூ ஆகியோர் முன்னிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
The post டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு appeared first on Dinakaran.