* இந்தோனேசிய அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
புதுடெல்லி: நாட்டின் 76வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் கடமைப் பாதையில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ பங்கேற்றார். தொடர்ந்து நடந்த அணிவகுப்பில் முப்படைகளின் பலத்தை பறைசாற்றும் வகையில் நவீன பீரங்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகளும், நாட்டின் பன்முக கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் நடனங்களும் காட்சிபடுத்தப்பட்டன.
இந்தியாவின் 76வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவின் துவக்கமாக தேசிய போர் நினைவு சின்னத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு, பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் இருந்து குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் கடமைப் பாதைக்கு, குதிரைகளால் இழுத்து வரப்பட்ட திறந்த சாரட் வண்டியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ ஆகியோர் வந்தனர்.
கடமைப் பாதையில் அவர்கள் இருவரையும், பிரதமர் மோடி வரவேற்று, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து, ஜனாதிபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் வானில் இருந்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரமாண்ட அணிவகுப்பு துவங்கியது. அணிவகுப்புக்கு டெல்லி பகுதி ராணுவ தளபதி லெப்ட்டினென்ட் ஜெனரல் பவனிஷ் குமார் தலைமை தாங்கினார்.
அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி முர்மு ஏற்றுக் கொண்டார். அணிவகுப்பை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள், பல்வேறு நாட்டு தூதரக அதிகரிகள் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். அணிவகுப்பின் தொடக்கமாக லெப்டினன்ட் அஹன்குமார் தலைமையிலான ராணுவத்தின் 61 குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து வந்தனர். இந்திய ராணுவத்தில் 1953ல் குதிரைப்படை தொடங்கப்பட்டது. தற்போது உலகிலேயே குதிரைப்படை கொண்ட ஒரே ராணுவமாக இந்தியா உள்ளது.
இதைத் தொடர்ந்து, டி20 பீஷ்மா பீரங்கி, நாக் ஏவுகணை அமைப்பு, பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, பிரலே ஏவுகணை, பினாகா மல்டி ரேஞ்சர் ராக்கெட் அமைப்பு, அக்னிபான் மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர், ஆகாஷ் ஆயுத அமைப்பு, போர்க்கள கண்காணிப்பு அமைப்பு, சேட்டக் ராணுவ வாகனங்கள் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. பின்னர் முப்படைகளைச் சேர்ந்த குழுவினரின் மிடுக்கான அணிவகுப்பும், ராணுவ பேண்ட் இசைக்குழுவினரின் அணிவகுப்பும் நடந்தது.
இதில், இந்திய கடற்படையின் அலங்கார வாகனத்தில் சமீபத்தில் கடற்படையில் சேர்க்கப்பட்ட ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகியவற்றின் மாதிரிகள் இடம் பெற்றிருந்தன. முதல் முறையாக முப்படைகளின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் ராணுவம், விமானப்படை, கடற்படைகள் இணைந்த அலங்கார வாகனம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து, என்எஸ்எஸ், என்சிசி மாணவர் படையினர் அணிவகுப்பு நடந்தது. ராணுவத்தின் ஒட்டகப்படையினரின் அணிவகுப்பில் இடம் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, மாநிலங்கள் சார்பில் 16 அலங்கார வாகனங்களும், ஒன்றிய அரசு சார்பில் 15 அலங்கார வாகனங்களும் அணிவகுத்து சென்றன. இவை இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தன. உத்தரப்பிரதேச மாநிலம் சார்பில் மகாகும்பமேளாவை பிரதிபலிக்கும் வகையில் வாகனம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்தியா அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை கொண்டாடும் வகையில், ‘பொன்னான இந்தியா: பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி’ என்ற கருப்பொருளில் அணிவகுப்பு நடந்தது.
அலங்கார வாகன அணிவகுப்பை தொடர்ந்து, முதல் முறையாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைஞர்கள் 45 விதமான நடனங்களை ஆடி அணிவகுப்பில் இடம் பெற்றனர். ராணுவ வீரர்களின் டேர்டெவில்ஸ் குழுவினர் பைக் சாகசத்தில் இடம் பெற்றனர். இதில் கேப்டன் டிம்பிள் சிங் பைக்கில் பொருத்திய ஏணியில் ஏறி நின்ற படி ஜனாதிபதிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். அணிவகுப்பின் இறுதியாக விமானப்படையின் 40 போர் விமானங்களின் வான்சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் கடற்படையினர் ஹெலிகாப்டர்களும் பங்கேற்றன. ரபேல், சுகோய்-30, ஜாகுவார், சி-130, சி-295, டோர்னியர் 228, ஏஎன்-32 போர் விமானங்களும், அப்பாச்சி, எம்ஐ-17 ஹெலிகாப்டர்களும் வானில் பல்வேறு சாகங்களை நிகழ்த்தின. கடைசியாக ரபேல் போர் விமானம் செங்குத்தாக பறந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. அணிவகுப்பு முடிந்ததும் விருந்தினரான சுபியந்தோவுடன், ஜனாதிபதி திரவுபதி முர்மு சாரட் வண்டியில் ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டார்.
முதல் முறையாக… குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக நடந்த நிகழ்வுகள்
* பைக் சாகசத்தில் முதல் முறையாக 12 அடி உயர ஏணியில் நின்றபடி பெண் கேப்டன் டிம்பிள் சிங் பாட்டி ஜனாதிபதிக்கு சல்யூட் அடித்து புதிய உலக சாதனை நிகழ்த்தினார்
* முதல் முறையாக முப்படைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்றது.
* உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறுகிய தூர குவாசி பாலிஸ்டிக் ஏவுகணை பிரலே முதல் முறையாக பங்கேற்றது.
* போர்க்கள கண்காணிப்பு அமைப்பான சஞ்சய் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.
* இந்தோனேசிய ராணுவ குழுவினர் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனர்.
* முதல் முறையாக 5000 நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைஞர்கள் பாரம்பரிய நடனமாடினர்.
* பாதுகாப்பு பணியில் 70 ஆயிரம் பேர்
குடியரசு தின விழாவையொட்டி டெல்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 70 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர். டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குடியரசு தின அணிவகுப்பு நடந்த கடமைப்பாதை பகுதியில் மட்டும் 15,000 வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
* 10000 சிறப்பு அழைப்பாளர்கள்
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் பார்த்தனர். இந்த விழாவில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய 500 கிராம தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதுதவிர பேரிடர் மீட்பு பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 200 இந்திய வீரர்கள், மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், விவசாயிகள், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் என பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக குடியரசு தின விழாவில் பங்கேற்றனர்.
* அணிவகுப்பில் இந்தோனேசிய ராணுவக்குழு
குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டின் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்து கொண்ட நிலையில் இம்முறை இந்தோனேசிய அதிபர் சுபியந்தோ பங்கேற்றார். இந்தோனேசிய அதிபர் குடியரசு தினவிழாவில் பங்கேற்பது இது 4வது முறை. அதோடு முதல் முறையாக இம்முறை இந்தோனேசிய ராணுவ குழுவினரும் அணிவகுப்பில் பங்கேற்றனர். அணிவகுப்பின் தொடக்கத்திலேயே இந்தோனேசியாவின் முப்படைகளை சேர்ந்த 152 வீரர்கள் சீருடையில் அணிவகுத்து சென்றனர்.
* சாரட் வண்டியின் பாரம்பரிய பின்னணி
குடியரசு தின விழாவிற்கு ஜனாதிபதி முர்மு வந்த குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி 40 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டிலிருந்து மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு பாதுகாப்பு கருதி இந்த சாரட் வண்டி பயன்படுத்தப்படவில்லை. கடைசியாக 1984ல் ஜனாதிபதி கியானி ஜெயில் சிங் இந்த சாரட் வண்டியை பயன்படுத்தினார். அதன்பிறகு குடியரசு தின அணிவகுப்பை முடித்து முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வில் 2014ல் இந்த சாரட் வண்டியை பிரணாப் முகர்ஜி மீண்டும் பயன்படுத்த தொடங்கினார்.
குடியரசு தின விழாவில் பாரம்பரிய முறைப்படி இந்த சாரட் வண்டியில் ஜனாதிபதி வரும் வழக்கம் கடந்த 2024ம் ஆண்டிலிருந்து மீண்டும் பின்பற்றப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த சாரட் வண்டி யாருக்கும் சொந்தம் என இந்தியா, பாகிஸ்தான் இடையே சரச்சை எழுந்தது. அப்போது, நாணயத்தை சுண்டிவிட்டு டாஸ் போட்டதில் வென்றதன் மூலம் சாரட் வண்டி இந்தியாவுக்கு சொந்தமானது குறிப்பிடத்தக்கது.
* வண்ணமயமான நீண்ட தலைப்பாகை
பிரதமர் மோடி நேற்று வெள்ளை நிற குர்தா பைமாவும், அதன் மீது பிரவுன் நிற பந்த்லா ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். அவரது தலைப்பாகை மஞ்சள், சிவப்பு நிற கோடுகளுடன் பிரகாசமாக மிக நீண்டதாக இருந்தது. இது வழக்கம் போல் அனைவரின் கவனத்தை கவர்ந்தது.
The post டெல்லியில் 76வது குடியரசு தின விழா கோலாகலம் ஜனாதிபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார்: ராணுவ வலிமையை பறைசாற்றிய முப்படை அணிவகுப்பு appeared first on Dinakaran.