நாக்பூர்: மும்பை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் சிவசேனா தனித்து போட்டியிடும் என்றும் சஞ்சய் ராவத் அறிவித்துள்ளதால் டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் இந்தியா கூட்டணி உடைகிறது. மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி உருவானது. காங்கிரஸ் தலைமையில் திமுக, திரிணாமுல், சிவசேனா உத்தவ் பிரிவு, ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவு, ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட்டுகள் இணைந்து போட்டியிட்டன. மக்களவை தேர்தல் முடிந்த பிறகு மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த கூட்டணி இணைந்து போட்டியிட்டது.
ஆனால் தோல்வியை தழுவியது. இந்த சூழலில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதனால் டெல்லியில் இந்தியா கூட்டணி உடைந்து விட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மிக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்த நிலையில் விரைவில் மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த உத்தவ் கட்சி தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நாக்பூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த உத்தவ் கட்சி எம்பி சஞ்சய் ராவத் கூறியதாவது: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காகத்தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. உள்ளாட்சி மன்ற தேர்தலுக்காக அல்ல. மும்பை, தானே, நாக்பூர் உள்ளிட்ட மாநகராட்சி தேர்தலிலும், ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து தேர்தலிலும் உத்தவ் சிவசேனா தனித்து போட்டியிடும். உத்தவ் சிவசேனா தனித்து போட்டியிடும் என்பதற்கான இசைவுகளை உத்தவ் தாக்கரே தந்துவிட்டார்.
கூட்டணியில் இருக்கும் போது, கட்சி தொண்டர்கள் பலருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. எனவேதான் எங்களின் பலத்தை வைத்து தனித்து போட்டியிட இருக்கிறோம். சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு மற்றவர்களை காங்கிரஸ் தலைவர் விஜய் வட்டேத்திவார் குற்றம்சாட்டுகிறார். விட்டுக்கொடுக்க தெரியாதவர்களுக்கு கூட்டணியில் இடம்பெற உரிமை இல்லை.
இந்தியா கூட்டனியில் எங்களால் ஒரு ஒருங்கிணைப்பாளரைக் கூட நியமிக்க முடியவில்லை. இது நல்லது அல்ல. சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் இந்தியா கூட்டணி சார்பில் ஒரு கூட்டம் கூட நடைபெறவில்லை. இந்த கூட்டணியில் காங்கிரஸ்தான் பெரிய கட்சி. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிதான் இந்த கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. இவ்வாறு குற்றம் சாட்டினார்.
* அரசியலில் நாளை நடப்பதை கணிக்க முடியாது:உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு
சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவிடம் நினைவிடம் மும்பை தாதரில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகளை பார்வையிட்ட உத்தவ் தாக்கரே கூறுகையில்,’ 2026ல் யார் பிரதமராக இருக்கிறார்களோ அவர்களது தலைமையில் திறப்பு விழா நடைபெறும்.
அரசியலை பொறுத்தவரை நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டும் போது நான் முதல்வராக இருந்தேன். ஆனால் இப்போது நான் முதல்வராக இல்லை. எனவே அந்த நேரத்தில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள் திறந்து வைப்பார்கள். பாஜ கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தால் அவர்களின் பிரதிநிதிகள் வருவார்கள்’ என்று தெரிவித்தார்.
The post டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் இந்தியா கூட்டணி உடைகிறது: உத்தவ் கட்சி அறிவிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.