புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூட்டை மூட்டையாக பாதி எரிந்த நிலையில் கிடக்கும் பணத்தின் வீடியோ மற்றும் புகைப்படத்தையும், விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி லுத்தியன்ஸ் பகுதியில் உள்ள டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த 14ம் தேதி நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்த போது, வீட்டினுள் பொருட்கள் வைக்கும் ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு நீதிபதியின் அதிகாரப்பூர்வ வீட்டிலிருந்து மூட்டை மூட்டையாக பணம் மீட்கப்பட்ட விவகாரம் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டது.
மேலும், நீதிபதிகள் ஷீல் நாகு (பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி), ஜி.எஸ்.சந்தவாலியா (இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி) மற்றும் அனு சிவராமன் (கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி) ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட விசாரணை குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்து உத்தரவிட்டுள்ளார். இக்குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் வரையிலும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த வழக்குகளும் ஒதுக்கப்படக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பு விளக்கத்தையும் பெற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கேட்டுக் கொண்டது. கொலிஜியம் உத்தரவுப்படி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் தனது அறிக்கையையும், நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது தரப்பு விளக்கத்தையும் நேற்று முன்தினம் சமர்ப்பித்தனர். இவை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டது.
இதில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர, டெல்லி தலைமை நீதிபதி தேவேந்திர குமார் அளித்த 25 பக்க அறிக்கையும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பொது வெளியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தலைமை நீதிபதி தேவேந்திர குமார் கூறியிருப்பதாவது:
டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, நீதிபதி யஷ்வந்த் வர்மா மற்றும் நீதிபதி வீட்டில் பணியாற்றிய பாதுகாவலர் உள்ளிட்டோர் அளித்த தகவல்கள் மற்றும் நேரில் விசாரித்ததன் மூலம் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அறிக்கை சமர்பித்துள்ளேன். கடந்த 14ம் தேதி காலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறி உள்ளார். மின் கசிவால் இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பின் 15ம் தேதி காலையில், அந்த அறையில் இருந்து பாதி எரிந்த நிலையில் பொருட்கள் எடுக்கப்பட்டதாக பாதுகாவலர்கள் கூறி உள்ளார்.
அதில் 4 முதல் 5 மூட்டையில் பாதி எரிந்த நிலையில் கட்டுகட்டாக பணம் மீட்கப்பட்டதாகவும் அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை போலீஸ் கமிஷனர் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக நேரில் விசாரிக்க பதிவாளரை நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிற்கு அனுப்பினேன். அங்கு தீ விபத்து நடந்த அறை முழுவதும் கருகிய நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, லக்னோவில் இருந்து நான் டெல்லி திரும்பியதும் 17ம் தேதி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நேரில் அழைத்து, மூட்டை மூட்டையாக மீட்கப்பட்ட பணம் குறித்து விசாரித்தேன். அது தொடர்பான வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் காண்பித்தேன். அதற்கு அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார். தனக்கு எதிராக சதி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக மேல் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.
அடுத்தாக இனி இந்த விவகாரத்தை 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரிக்க உள்ளது. இக்குழு விசாரணை அறிக்கை சமர்பிக்க எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதே சமயம் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் கடந்த 6 மாத கால போன் பதிவுகளை வழங்க காவல்துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. போனில் இருந்து எந்த தரவுகளையும் நீதிபதி யஷ்வந்த் வர்மா அழிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
* முக்கிய கட்டத்தை எட்டிய விசாரணை
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் அவரது தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய முக்கியமான 2ம் கட்டத்திற்கு துறைசார் விசாரணை முன்னேறி உள்ளது. இதில் 3 நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிட்டி தீவிர விசாரணை நடத்தும். முதல்கட்ட விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்படாத பட்சத்தில், தலைமை நீதிபதி பரிந்துரையின் பேரில் 2ம் கட்ட தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்படும். 3 நீதிபதிகள் கொண்ட குழுவின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பின் கீழ் நடைபெறும்.
இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட நீதிபதியை நீக்குவதற்கு 2 வழிமுறைகள் உள்ளன. சம்மந்தப்பட்ட நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் அறிவுறுத்தப்பட்டு, தாமாக ராஜினாமா செய்வார் அல்லது விருப்ப ஓய்வு பெறுவார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியும் சம்மந்தப்பட்ட நீதிபதி பதவி விலகாத பட்சத்தில், அவரை பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்குவார். இதுதொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஆதாரங்கள் வழங்கப்பட்டு நீதிபதி நீக்கம் செய்யப்படுவார்.
* எனக்கும், பணத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை
நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது விளக்கம் குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: உயர்நீதிமன்ற விருந்தினர் மாளிகையில் உங்களை (தலைமை நீதிபதி) சந்தித்த போதுதான், போலீஸ் கமிஷனர் மூலம் தரப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை முதல் முதலில் பார்த்தேன். அந்த வீடியோ பதிவுகள் முற்றிலும் எனக்கு அதிர்ச்சி அளித்தன. ஏனெனில் உண்மைக்கு மாறாக அது இருந்தது. இது என்னைக் குற்றம் சாட்டுவதற்கும் அவதூறு செய்வதற்கும் ஒரு சதி. ஸ்டோர் ரூமில் பணம் இருந்தது எனக்கு தெரியாது.
நானோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களோ அங்கு பணத்தை வைக்கவில்லை. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மேலும், சம்பவத்தன்று எனது குடும்பத்தினரிடமோ எனது வீட்டிலிருந்த ஊழியர்களிடமோ அந்த பணம் காட்டப்படவில்லை. எங்களிடம் அது ஒப்படைக்கப்படவில்லை. தீ விபத்தில் எரிந்து போன பொருட்களின் ஒரு பகுதி இன்னமும் என்வீட்டில்தான் உள்ளது. தீ விபத்து நிகழ்ந்த போது நானும் எனது மனைவியும் போபாலுக்கு சென்றிந்தோம். எனது மகளும் வயதான தாயாரும் வீட்டில் இருந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட ஸ்டோர் ரூம் தேவையில்லாத பொருட்கள் வைப்பதற்கான அறை. அது என் வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள், தோட்டகாரர்கள் என அனைவரும் சென்று வரும் இடம். பொதுவான அறை. இது எனது வீட்டின் பிரதான பகுதியாகவும் இல்லை. மீண்டும் சொல்கிறேன், அந்த பணத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எங்களின் பணப் பரிவர்த்தனை அத்தனையும் சட்டப்பூர்வமானது. வங்கிகள் மூலமாகவோ, யுபிஐ மற்றும் கார்டுகள் மூலமாகவோ மட்டுமே பரிவர்த்தனைகள் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
* முரண்பாடான தகவல் கூறிய தீயணைப்பு துறை
டெல்லி தீயணைப்பு துறை தலைவர் அதுல் கார்க் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘நீதிபதி வீட்டில் ஸ்டோர் ரூமில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்கு இரவு 11.35 மணிக்கு தகவல் வந்தது. உடனடியாக 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். தீயை அணைத்து முடித்ததும் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேறி விட்டனர். தீயணைப்பின் போது, எந்த பணத்தையும் தீயணைப்பு வீரர்கள் பார்க்கவில்லை’’ என்றார்.
ஆனால் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட வீடியோவில் தீயணைப்பு வீரர் சீருடையில் ஒருவர் எரிந்த பொருட்களை விலக்குவது போலவும், அருகில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக பணக்குவியல் இருப்பது போலவும் காட்சிகள் பதிவாகி உள்ளன. எனவே தீயணைப்பு துறை இந்த விவகாரத்தில் எதற்காக முரண்பாடான தகவல் வெளியிட்டது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் மூட்டை மூட்டையாக எரிந்த பணத்தின் வீடியோ வெளியீடு: உச்சநீதிமன்றம் அதிரடி, விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களையும் இணையதளத்தில் வெளியிட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.