புதுடெல்லி: டெல்லி நோக்கிச் சென்ற அயோத்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்பு தொலைபேசியில், ‘டெல்லி நோக்கி செல்லும் அயோத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-8 பயணிகள் பெட்டியின் கழிப்பிட அறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில் லக்னோவின் சர்பாக் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்பு வெடிக்கும்’ என்று கூறிய நபர், திடீரென அழைப்பை துண்டித்துவிட்டார்.
உஷாரான போலீசார், டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலை உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி ரயில் நிலையத்தில் நிறுத்தனர். அந்த ரயிலின் அனைத்து பெட்டிகளையும் சோதித்தனர். மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்காததால் ரயில்வே மற்றும் பாதுகாப்பு படை போலீசார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். சுமார் 2 மணி நேர சோதனைக்கு பிறகு அந்த ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
இருந்தும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘குறிப்பிட்ட ரயிலின் கழிப்பறையில், குண்டுவெடிப்பு தொடர்பான வாக்கியங்கள் எழுதப்பட்டதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், அந்த ரயிலில் தீவிர சோதனை செய்யப்பட்டது. எவ்வித சந்தேகத்திற்கு இடமான பொருட்களும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.
The post டெல்லி நோக்கிச் சென்ற அயோத்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.