டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மாதம் 14ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.
கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும், தங்களது சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் சொத்து விவரங்கள், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
The post தங்களின் சொத்து விவரங்களை பொதுவெளியில் அறிவிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு!! appeared first on Dinakaran.