ஜெயவேல்முருகன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள படம் 'வருணன்'. யாக்கை பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வான் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பு செய்துள்ளது. இதில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர். போபோ சஷி இசையமைத்துள்ளார். ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 14-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் அன்புச்செழியன், இயக்குநர் சத்ய சிவா, நடிகர் கிருஷ்ணா கலந்து கொண்டனர். அன்புச்செழியன் இசையை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.
படம் பற்றி இயக்குநர் ஜெயவேல்முருகன் கூறும்போது, “இது தண்ணீரைப் பற்றிய படம். ஆண்டவர் வாட்டர் விநியோகம் என்ற பெயரில் மதுரையிலிருந்து வந்து தண்ணீர் கேன் விநியோகம் செய்பவராக ராதா ரவி நடித்திருக்கிறார். சென்னையில் பிறந்து வாட்டர் சப்ளை செய்பவர் சரண்ராஜ். இந்த இரண்டு பேருக்கும் இடையே நடைபெறும் மோதல்தான் கதை. வருண பகவானின் கோணத்தில் இருந்து கதையை சொல்லி இருக்கிறோம். என்றைக்குத் தண்ணீரை நாம் காசுகொடுத்து வாங்க ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து இயற்கையின் சாபம் நம்மைத் துரத்த ஆரம்பித்து விட்டது. அதுதான் இந்தப் படத்தின் டேக் லைன், ஒன் லைன். தண்ணீர் சேமிப்பு குறித்து முடிந்தவரை சொல்லியிருக்கிறோம். தண்ணீரால் வரும் பிரச்சினைகளைப் பற்றியும் சொல்லி இருக்கிறோம்” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.