புதுடெல்லி: சிறுபான்மையினர் அல்லாத தனியார் கல்வி நிறுவனங்களில் தலித்,பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எம்பி நேற்று விடுத்துள்ள அறிக்கை: கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அரசியல் சட்டத்தின் 15(5) பிரிவை அமல்படுத்துவதற்கு சட்டம் இயற்ற அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அரசியல் சட்டம் 15(5) பிரிவு சிறுபான்மையினர் அல்லாத கல்வி நிறுவனங்களில் தலித், பழங்குடிகள்,பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தொடர்பான சிறப்பு சலுகைக்கு அனுமதி அளிக்கிறது.
கடந்த மக்களவை தேர்தலின் போது, அரசியல் சட்டம் 15(5) பிரிவை அமுல்படுத்துவதற்கு காங்கிரஸ் உறுதி அளித்திருந்தது. மத்திய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம்,கடந்த 2006 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மத்திய கல்வி நிறுவனங்களில் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ஜனவரி 3, 2007 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து அசோக்குமார் தாக்குர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக தகுந்த நேரத்தில் முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதன் பொருள், தனியார் கல்வி நிறுவனங்களில் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டுக்கு சட்டம்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை appeared first on Dinakaran.