திருவொற்றியூர்: தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுசென்றபோது 2 டன் எடையுள்ள இரும்பு உபகரணம் சாலையில் விழுந்த சம்பவம் திருவொற்றியூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கத்தில் கடலில் தூண்டில் வளைவு மற்றும் சாலைகள் அமைக்க பயன்படும் ராட்சத கான்கிரீட் பாறைகளை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு சிமென்ட், கருங்கல், ஜல்லி போன்றவற்றை பயன்படுத்தி ஸ்டார் வடிவிலான ராட்சத பாறைகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் பாறைகள் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சிமென்ட் பாறையை தயாரிக்க பயன்படும் ஸ்டார் வடிவிலான பேட்டன் எனக்கூடிய நான்கு ராட்சத இரும்பு உபகரணம் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளிநாட்டிலிருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகம் கொண்டுவரப்பட்டு பின்னர் அங்கிருந்து டிரெய்லர் லாரியில் ஏற்றி, எண்ணூர் விரைவு சாலையில் கொண்டுவரப்பட்டது. திருவொற்றியூர் அருகே திருச்சினாங்குப்பம் அருகே வந்தபோது லாரியில் இருந்த ஒரு ராட்சத இரும்பு உபகரணம், பெல்ட் அறுந்து கீழே உருண்டது. அதன் எடை சுமார் 2 டன் இருக்கும். இதைப் பார்த்த லாரி ஓட்டுநர் முருகன் என்பவர் உடனடியாக லாரியை நிறுத்தினார். அதிர்ஷ்டவசமாக அப்போது பின்னால் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய விபத்து ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அஜாக்கிரதையாக பொருட்களை எடுத்து வந்ததாக லாரி ஓட்டுனருக்கு போலீசார் அபராதம் விதித்து பாதுகாப்புடன் லாரியில் பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என எச்சரித்தனர். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு கீழே உருண்ட இரும்பு உபகரணத்தை மீண்டும் லாரியில் ஏற்றி பாதுகாப்பாக கட்டி அழிஞ்சுவாக்கத்தில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு சென்றனர்.
The post தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுசென்றபோது சாலையில் விழுந்த 2 டன் இரும்பு உபகரணம்: திருவொற்றியூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.