அரசியல், இந்தியா, கட்டுரை, சிந்தனைக் களம், தமிழ்நாடு, தேர்தல்

என்ன சொல்கிறது தமிழ்நாடு?


இந்த மக்களவைத் தேர்தலில், மத்தியில் யார் எவ்வளவு வெல்வார்கள் என்பதிலும் யார் ஆட்சியமைப்பார்கள் என்பதிலும் ஏராளமான கருத்துகள் நிலவின; பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலைதான். தீர்க்கமாக எங்கேனும் வெற்றித்திசை தெரிந்தது என்றால், அது தமிழ்நாட்டில் மட்டும்தான். நாடு முழுக்க மோடியைத் தேர்ந்தெடுத்திருக்கும் சூழலில், தமிழ்நாடு எதிர்த்திசையில் நிற்கிறது வழக்கம்போலவே. கடந்த முறை தமிழர்களின் தேர்வு அதிமுகவாக இருந்தது; இம்முறை திமுகவாக இருக்கிறது.

திமுகவை அதன் பழைய தவறுகளிலிருந்து விடுவித்திருக்கிறார்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மக்கள் தலைவராக ஏற்றிருக்கிறார்கள் என்பதைத் தாண்டி முக்கியமான விஷயம் இதுதான்: மாநிலத்தின் உரிமை.
முதல்வராக ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் நிலைமையே வேறு. மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலையிலும், மாநிலத்திலும் வலுவான ஆட்சி என்ற நிலையிலும் அவர் கட்சியை விட்டுச்சென்றார்.

பாஜகவோடு எதிர்முனையில் இருந்தவர் இல்லை என்றாலும், மாநில உரிமைகள் சார்ந்து பாஜகவோடு எப்போதும் மல்லுக்கு நின்றவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டு மக்கள் தங்களுடைய தலைவர்களிடம் எதிர்பார்ப்பது இதைத்தான்; நம்முடைய உரிமைகள் நம் கையில் இருக்க வேண்டும், டெல்லியிலிருந்து நமக்கு யாரும் உத்தரவிட முடியாது.

மாநிலங்கள் உரிமைகளைப் பேசும் தலைவராகவும், வலுவான மாநிலத் தலைவராகவும் இருந்து, பிரதமரானதும் மத்திய – மாநில உறவுகளை வலுப்படுத்த கூட்டுறவுக் கூட்டாட்சி எனும் முழக்கத்தைப் பேசியவருமான மோடி, தன்னுடைய ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகளை மறுதலிப்பவராக உருமாறியது துரதிர்ஷ்டவசமான முரண்பாடுதான். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே ஜிஎஸ்டி, நீட் தேர்வு போன்ற பல விஷயங்களில் மத்திய அரசின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு அதிருப்தி இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தங்களுடைய அரசியலுக்காக மாநில உரிமைகளைப் பறிகொடுப்பவர்களாக அதிமுக ஆட்சியாளர்கள் மாறியபோது தமிழக மக்களின் கோபம் இரட்டிப்பானது. மாநில ஆட்சி நிர்வாகமும், பழனிசாமி அரசு சில விவகாரங்களைக் கையாண்ட விதமும் அவர்கள் மீது மேலும் கோபம் அதிகரிக்க வழிவகுத்தது.

மோடி அரசுகூட நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தபோது அவர்களோடு பேச கீழே இறங்கிவந்தது; தன்னுடைய முயற்சியைக் கைவிட்டது. ஆனால், வளர்ச்சியின் பெயரில் அரசு கொண்டுவர முனையும் திட்டங்களை எதிர்ப்போரை பழனிசாமி அரசு எதிர்கொண்ட விதம் மக்களைக் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. போராடும் சமூகக் குழுக்கள் மீதான அதிமுக அரசின் வழக்குகள், கைது நடவடிக்கைகள்; ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு இவையெல்லாம் மக்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டுவந்தன. தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான சரியான வாய்ப்பாக இப்போது தேர்தலை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

உள்ளூர் நிர்வாகத்தில் உள்ள அதிருப்தியைக் காட்டிலும், மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பதால் விளைந்திருக்கும் அதிருப்தியே அதிகம் என்றும் மக்களின் இத்தீர்ப்பை அர்த்தப்படுத்தலாம். சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றியை அளித்திருக்கும் மக்கள், மக்களவையில் ஒரு தொகுதியை மட்டுமே அவர்களுக்கு அளித்திருப்பதையும், மாநிலத்தில் பாஜக ஏற்கெனவே தன் வசம் வைத்திருந்த ஒரு தொகுதியையும்கூட இழந்திருப்பதையும் இந்த வகையில்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முதல்வர் பழனிசாமிக்கு இன்னமும்கூடத் தன்னை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஏனென்றால், முற்றிலுமாக அதிமுகவை மக்கள் இன்னமும் நிராகரித்துவிடவில்லை. அதிமுகவிலேயே ஒரு பிளவை உண்டாக்கி ‘நாங்கள்தான் உண்மையான அதிமுக’ என்று உரிமை கோரிவந்த தினகரனின் அமமுகவை முற்றிலுமாக ஒதுக்கியிருப்பதை இங்கே கவனிக்க வேண்டும்; அந்த வகையில் பழனிசாமி தலைமையிலான அதிமுகவையே அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள்.

மேலும், இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றியை அளித்திருப்பதன் வாயிலாக இந்த ஆட்சிக்கு ஏற்பட்டிருந்த ஸ்திரத்தன்மையற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்; இன்னும் இரண்டாண்டுகள் இந்த ஆட்சி நிலைத்திருப்பதற்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆனால், மிச்சமிருக்கும் நாட்களில் மக்களுடைய எண்ணவோட்டத்தைப் புரிந்து, பழனிசாமி தன்னுடைய ஆட்சியைக் கொண்டுசெல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *